என் மலர்
தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 26, 27-ந்தேதிகளில் மழைக்கு வாய்ப்பு
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
- மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டிருந்தது. அது மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 26-ந்தேதி காலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகாலையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு குளிர் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் இன்று முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையை கடந்து தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக்கடலுக்கு செல்லும்.
இதன் காரணமாக வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.