search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மானாமதுரை  அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை- ரெயில்வே ஊழியருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை
    X

    மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடை- ரெயில்வே ஊழியருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை

    • பாலமுருகனை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். இங்கு விபத்து காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சமீபத்தில் பெய்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் தாழ்வாக செல்லும் மின்சார வயர்கள், மரங்களின் மீது உரசும் வயர்களால் ஏற்படும் மின்தடையானது பல நேரங்கள் கழித்த பிறகே சரி செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்தநிலையில் இது போன்ற மின்தடையால் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மானாமதுரை அருகேயுள்ள கீழபசலை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ரெயில்வே ஊழியரான இவரை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி சரிந்தார்.

    இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தயாரானார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    அப்போது டாக்டர்கள் வேறு வழியின்றி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் செல்போன்களில் டார்ச் லைட்டை எரியவிடுமாறு கூறினர். அந்த வெளிச்சத்தில் அரிவாள் வெட்டு காயம் அடைந்த பாலமுருகனுக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இன்று வைரலாகி உள்ளது.

    அவசர கால சிகிச்சைக்கு கூட ஒரு ஜெனரேட்டர் வசதியோ அல்லது பேட்டரி வசதியோ இல்லாத நிலையில் ரெயில்வே ஊழியருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×