என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் ஆபத்தா? ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.யிடம் தேர்தல் ஆணையம் விரைவில் விசாரணை இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் ஆபத்தா? ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.யிடம் தேர்தல் ஆணையம் விரைவில் விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9261940-newproject11.webp)
இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் ஆபத்தா? ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.யிடம் தேர்தல் ஆணையம் விரைவில் விசாரணை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழைப்பாணை அனுப்ப திட்டம்.
- ஒன்றுபட்ட அ.திமு.க. வை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.
அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைந்த பின்னர் 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை அவருக்கே ஒதுக்கியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து ஏற்படுமோ? என்கிற அச்சம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவு வக்கீல் ஒருவர் கூறும் போது, தேர்தல் ஆணையம் நடத்தும் விசாரணையில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்றுபட்ட அ.திமு.க. வை தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அ.தி.மு.க. வக்கீல்களோ இதனை மறுத்துள்ளனர். ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எல்லை மீறும் அளவுக்கு மூக்கை நுழைத்து செயல்பட முடியாது.
கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டு அது 2 அணியாக செயல்பட்டால் மட்டுமே யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கண்டறியலாம். அதில் பெரும்பான்மை உள்ளவர்களிடம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றுள்ள அ.தி.மு.க.வுக்கு ஏற்கனவே இரட்டை இலை சின்னம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் தற்போது இல்லாதவர்கள் எழுப்பி உள்ள கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல. இரண்டு அணிகள் தற்போது இல்லாத பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் விசாரணை நடத்த முடியாது என்பதே எங்கள் வாதம் என்று தெரிவித்தனர்.
இருப்பினும் இரட்டை இலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது அரசியல் களத்தில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.