என் மலர்
தமிழ்நாடு
மரபணு மாற்ற விதைகளால் மக்காச்சோள பயிர்கள் பாதிப்பு- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை.
- 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட நெல் தரமற்ற விதைகளால் குறுகிய காலத்தில் கதிர் வந்து இழப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தரமற்ற விதைகளால் 10 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள பயிர்களும் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்து அதிகளவில் பயிரிடும் பயிராக மக்காச்சோளம் முக்கிய பயிராக உள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தனியார் விதை நிறுவனங்களிடம் மக்காச்சோளப் பயிருக்கான விதைகளையும் தனியார் விதை நிறுவனங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் ஒருபுறம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் அதிக மகசூல் கிடைக்கும் என ஆசை காட்டி அதிகளவில் மருந்து செலவு மகசூல் இழப்பு, படைப்புழுத்தாக்குதல், வேரழுகல் உள்ளிட்ட நோய்களும் மேலும் அதிகப்படியான வெப்பம் மழை இவற்றால் மரபணு மாற்றம் செய்து விற்பனை செய்யப்படும் விதைகளால் விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்பதும் உரிய இழப்பீடு கேட்டு போராடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையை போக்க விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 மூட்டைகளே பாரம்பரிய மக்காச்சோளப் பயிரில் விளைச்சல் வந்தாலும் எந்தவித ரசாயன மருந்துகளுமின்றி எரு மட்டும் பயன்படுத்தி மகசூல் இழப்பு வராமல் தடுக்க இயலும் என்கின்றனர் இயற்கை விவசாயிகள்.
இதற்கு தமிழக வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்காச்சோளப் பயிர்சாகுபடி செய்துள்ள பரப்பில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்து உள்ள விவசாய நிலப்பரப்புகள் புள்ளிவிவரத்துடன் சன்னாவூரில் 750 எக்டேர் கோக்குடி, பூண்டி, மலத்தாங்குளம், ஆங்கியனூர், கொரத்தக்குடி, விளாகம், பளிங்காநத்தம், வெங்கனூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தட்டான்சாவடி, எரக்குடி, வேட்டைக்குடி, அயன்சுத்தமல்லி, கீழப்பழுவூர், வெற்றியூர், சாத்தமங்கலம், கள்ளூர் விரகாலூர் திருப்பெயர் வண்ணம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் 4 ஆயிரம் எக்டேர் வீதம் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயிர்க்காப்பீட்டு மூலம் நிவாரணத்தொகையும் பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் வங்கி மூலம் கடனாக ரூ23 ஆயிரம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்ததன் அடிப்படையில் மக்காச்சோளப் பயிருக்கு அரசு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கியது. காப்பீட்டு நிறுவனத்திற்கு 2021, 2022, 2023 காப்பீட்டுத்தொகை 350 செலுத்தியும் இழப்பீடு தொகைக்கான புள்ளிவிவரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கொடுக்காத காரணத்தால் பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க இயலவில்லை என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் கூறுகையில், தங்க சண்முக சுந்தரம் மரபணு மாற்றம் செய்து வழங்கப்படும் மக்காச்சோள விதைகளால் பயிர் சாகுபடியின்போது விவசாயிகள் தொடர்ந்து கடனாளிகாக ஆக்கப்படுகின்றனர்.
எனவே தற்போதைய நிலையில் தரமற்ற விதைகளை வழங்கி மகசூல் இழப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் உடனடியாக மகசூல் இழப்பு ஏற்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய விதைகளை வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் என்றார்.