என் மலர்
தமிழ்நாடு
சித்தேரி மலை சாலையில் மீண்டும் மண் சரிவு- பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
- 63 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள், முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் நேற்று அதிகாலை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக மலைகளில் ஆங்காங்கே சிறுசிறு அருவிகள் உருவாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரின் காரணமாக சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில், சூரியக்கடை பிரிவு சாலை அருகே மூன்றாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டு சூரியக்கடை சித்தேரி பேரரூபுதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 63 மலை கிராமங்களுக்கான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக இவ்வழியாக கார் மற்றும் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள், முதியோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் சேதமான மண் சரிவை சீரமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.