என் மலர்
தமிழ்நாடு
அரசியல் வேறுபாடுகளை தாண்டி நல்லக்கண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்குகிறார்- மு.க.ஸ்டாலின் புகழாரம்
- தலைவர் கலைஞரை விட ஐயா நல்லக்கண்ணு ஒரு வயதுதான் இளையவர்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது அதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டது நல்லக்கண்ணு தான்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடை பெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இரா.நல்லக்கண்ணுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்ததுடன் கவிதை நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இங்கே பழ.நெடுமாறன் குறிப்பிட்டு சொல்லும்போது வாழ்த்துவதற்காக நாங்கள் வந்திடவில்லை. வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம் என்றார். அந்த வகையில் நூற்றாண்டு விழா நாயகராக இருக்கக்கூடிய நல்லக்கண்ணுவின் தியாகத்தை சிறப்பை இன்றைக்கு போற்றிக் கொண்டிருக்கிறோம்.
சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக ஐயா வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம். உங்கள் வாழ்த்தை விட எங்களுக்கு பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்து விட போவதில்லை.
தந்தை பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லக்கண்ணு ஐயாவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ் சமுதாயத்திற்காக உழைக்க இன்னும் தயாராக இருக்கேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய ஐயாவுக்கு கம்பீரமான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கலைஞர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி என பல்வேறு தலைவர்களோடு நெருங்கி பழகியவர் நல்லக்கண்ணு.
தலைவர் கலைஞரை விட ஐயா நல்லக்கண்ணு ஒரு வயதுதான் இளையவர். இவரது 80-வது பிறந்தநாள் விழாவில் கலைஞர் குறிப்பிட்டு பேசும்போது, வயதால் எனக்கு தம்பி, அனுபவத்தால் எனக்கு அண்ணன், என்னைவிட வயதில் இளையவர், ஆனால் அனுபவத்திலும், தியாகத்திலும் நம்மைவிட மூத்தவர் என்று குறிப்பிட்டார்.
இதைவிட முத்தாய்ப்பாய் ஒன்றை குறிப்பிட்டார். ஒரு கார் விபத்து கலைஞருக்கு ஏற்பட்டது. அந்த விபத்தில் கலைஞரின் ஒரு கண் பாதிக்கப்பட்டது. அது எல்லாருக்கும் தெரியும். அதை குறிப்பிட்டு எனக்கு ஒரு கண்தான் முகத்தில் இருக்கிறது. இன்னொன்று அகத்தில் இருக்கிறது. அதுதான் நல்லக்கண்ணு என்று குறிப்பிட்டார். அந்த அளவுக்கு நல்லக்கண்ணுவை மதித்தார். தோழமை உணர்வோடு கலைஞர் பாராட்டினார்.
கடந்த 2001-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அராஜகமாக கைது செய்யப்பட்டது எல்லோருக்கும் நினைவிருக்கும். அப்போது அதை கண்டித்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டது யார் என்றால் நல்லக்கண்ணு தான்.
இத்தனைக்கும் அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அதைப்பற்றி கவலைப்படாமல் கண்டித்தார். அப்படிப்பட்ட தோழமை இறுதி வரை பேணி பாதுகாத்தார் கலைஞர்.
அந்த நட்புணர்வோடு தான் இன்றைக்கு நான் உங்களை வாழ்த்தவும், வாழ்த்து பெறவும் வந்திருக்கிறேன்.
நல்லக்கண்ணுக்கு அம்பேத்கர் விருது கலைஞர் வழங்கினார். நான் 2022-ல் தகைசால் தமிழர் வருது வழங்குகினேன். அம்பேத்கர் விருது பெறும்போது தமிழ் நாடு அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் 50 ஆயிரத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும், இன்னொரு 50 ஆயிரத்தை விவசாய சங்கத்துக்கும் கொடுத்து விட்டார்.
இப்போது நான் ஆட்சிக்கு வந்தபோது தகைசால் தமிழர் விருதை கொடுத்தபோது 10 லட்சம் ரூபாய் கொடுத்தோம். அந்த 10 லட்சத்துடன் 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர்தான் நல்லக்கண்ணு.
அவரது 80-வது பிறந்தநாளின்போது இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியனும், பொருளாளர் தாவீதும் ரூ.1 கோடி திரட்டி தந்தார்கள். அந்த ரூ.1 கோடியை மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கொடுத்தவர்தான் நல்லக்கண்ணு. அதே மேடையில் அவருக்கு வழங்கப்பட்டது. அதையும் அவர் இயக்கத்துக்கே கொடுத்து விட்டார்.
இப்படி இயக்கம் வேறு தான் வேறு என நினைக்காமல் இயக்கத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிற மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா?
கட்சிக்காகவே உழைத்தார். உழைப்பால் வந்த பணத்தை கட்சிக்காகவே கொடுத்தார். கட்சி வேறுபாடின்றி அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்.
திராவிட இயக்கத்துக்கும் பொது உடமை இயக்கத்துக்கும் ஆன அரசியல் நட்பு இடையிடையே விட்டுபோய் இருக்கலாம். ஆனால் கொள்கை நட்பு எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழவுக்கான ஏற்பாடுகளை தர்மலிங்கம் அறவழித் தொண்டு கல்வி அறக்கட்டளை நிறுவனர் த.மணி வண்ணன், திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.