என் மலர்
தமிழ்நாடு
சாதிவாரி கணக்கெடுப்பு: தெலுங்கானா காங்கிரசிடம் தி.மு.க. பாடம் கற்க வேண்டும்- ராமதாஸ்
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.
- கூல் லிப் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, பீகார், ஒடிசா மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடத்தும் நாடகம் அம்பலமாகி தி.மு.க. சொல்லும் சமூகநீதி என்ற முகமூடி கிழிந்துள்ளது. பொய்கள் மூலம் அரசு மக்களை ஏமாற்ற முடியாது. தெலுங்காவின் சாதிவாரி கணக்கெடுப்பு இம்மாதத்தின் இறுதியில் முடிகிறது. இப்பணிக்கு ரூ 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரூ.250 கோடியில் 2 மாதத்தில் நடத்திமுடிக்கலாம். தெலுங்கானா காங்கிரஸ் அரசிடம் தி.மு.க. பாடம் கற்க வேண்டும். ஸ்டாலினின் முகமூடியை ராகுல்காந்தியும், ரேவன் ரெட்டியும் கழட்டியுள்ளனர். இதுவே தேசிய அளவில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்புக்கு முன் மாதிரியாக இருக்கும் என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி இல்லை என்ற நாடகத்தை இனியாவது முதலமைச்சர் கைவிடவேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்பவேண்டும். 40 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதை மாற்றப்படவேண்டும். மருத்துவத்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது. இதுவே பணியிடங்களை நிரப்பாததற்கு காரணம். ரூ. 40 ஆயிரம் கோடியை வரும் ஆண்டில் நிதி ஒதுக்கவேண்டும்.
கூல் லிப் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் புகையிலை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. நீதிமன்றம் இந்த புகையிலைக்கு மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. எனவே மத்திய அரசு இப்புகையிலையை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் 2500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் கற்றல் பணி பாதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன். இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கோட்டைக்கு போகாத நான் கோட்டைக்கு சென்று இக்கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினேன். இக்கணக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினை பாராட்டுவேன். நாகரீகமாகவும், நளினமாகவும் எங்கள் செயல்பாடுகள் உள்ளது. காவல்துறையில் கருணாநிதி கூறியது போல ஈரல் மட்டுமல்ல இதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்துவிட்டது. பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சென்ற மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர்மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஏமாளிகள். பொறுத்து பொறுத்து பார்க்கிறோம்.
சிறைக்கு செல்வது எங்களுக்கு புதிது அல்ல. அமைதியை குலைக்க நாங்கள் விரும்பவில்லை. நூற்றுக்கு மேற்பட்ட அம்பேத்கர் சிலையை நான் திறந்து வைத்தேன். அச்சிலையை சேதப்படுத்தினால் பா.ம.க., வன்னியர் சங்கம்தான் குரல் கொடுக்கும். கடலூர் காவல்துறைக்கு கற்பனை அதிகம். ஒரு சார்பு இல்லாமல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கருணாநிதிதமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பார். அதையே நானும் சொல்கிறேன்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழுகூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் இந்நூற்பா பொருந்தலாம். பிராமிணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் நான் தான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வன்னியர் சங்கத்தலைவர் பு. தா. அருள்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.