என் மலர்
தமிழ்நாடு
ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9,460 கோடியாக உயர்வு- ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
- கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது.
- இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏறுமுகத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதம் 13.8 சதவீதமும், ஆகஸ்டு மாதம் 13.4 சதவீதமும், செப்டம்பர் மாதம் 18.4 சதவீதமும், அக்டோபர் மாதம் 36.4 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு முக்கிய பங்காற்றி வருகிறது. திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து வருவது உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.8 ஆயிரத்து 506 கோடியே 20 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 11.2 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதுபோல் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.82 ஆயிரத்து 509 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் அதிகரித்துள்ளதால் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுபோல் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 ஆயிரத்து 247 டாலர் மதிப்பில் வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7 ஆயிரத்து 817 டாலர் நடந்துள்ளது. அதன்படி 11.6 சதவீதம் ஏற்றுமதி அதிரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி. தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் கூறும்போது, 'ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ள நாடுகளிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவது நேர்மறையான எண்ணத்தை உற்பத்தியாளர்களிடம் விதைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி என்ற வர்த்தக இலக்கை நிச்சயம் எட்டும்' என்றார்.