search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை சங்கமம் போல தமிழகத்தில் 8 நகரங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: தமிழக அரசு அறிவிப்பு
    X

    சென்னை சங்கமம் போல தமிழகத்தில் 8 நகரங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: தமிழக அரசு அறிவிப்பு

    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
    • கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ள மெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாகத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழர்களின் பெருமித அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு எனப் பல்வேறு பெயர்களில் இது குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. அதி லும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77 ஆயிரத்து 683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்துடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.1.2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட நவீன அரங்காக அமைந்துள்ளது.

    பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடலில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

    மேலும், சென்னையில் 18 இடங்களில் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன.

    இவ்விழாவில் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாரா ஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தரகாண்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    தமிழர் திருநாளாம் பொங்கலைப் பொதுமக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிடும் வகையில், கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×