search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் ஒரு இந்தியர் பலி
    X

    ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் ஒரு இந்தியர் பலி

    • போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள்.
    • இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

    ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்திய இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு ரஷிய ராணுவத்தில் உதவியாளராக கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.

    ரஷிய ராணுவம் சார்பில் ராணுவ உதவியாளர்கள் என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

    இப்போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

    இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். அரியானாவை சேர்ந்த ரவிமவுன் (வயது 22) என்பவர் ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் உக்ரைன் போரில் பலியாகி உள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    ஆனால் ரவிமவுன் மரணம் குறித்து அவரது சகோதரர் அஜய் மவுனுக்கு இந்திய தூதரகம் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அதில் ரவிமவுன் மரணத்தை ரஷிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உடலை அடையாளம் காண, நெருங்கிய உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ. சோதனை தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி சமீபத்தில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷியா, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×