search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நிஜ்ஜார் கொலை வழக்கு: மேலும் ஒரு இந்தியர் கைது
    X

    நிஜ்ஜார் கொலை வழக்கு: மேலும் ஒரு இந்தியர் கைது

    • நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக 4-வது இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அமர்தீப் சிங் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறையின் காவலில் இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ஓட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இக்கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தை இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய 3 இந்தியர்களை சமீபத்தில் கனடா போலீசார் கைது செய்தனர். இவர்கள் ல்பர்ட்டா என்ற பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு இந்திய அரசுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக 4-வது இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்ப்டன், சர்ரே மற்றும் அபோட்ஸ்போர்ட் பகுதிகளில் வசித்த அமர்தீப் சிங் (வயது 22) என்ற இந்தியர், நிஜ்ஜார் கொலையில் பங்கு வகித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அமர்தீப் சிங் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறையின் காவலில் இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் பங்கு வகித்தவர்களை பொறுப்பேற்கச் செய்வதற்கான எங்களது விசாரணையின் தன்மையை இந்த கைது காட்டுகிறது என்று அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.

    Next Story
    ×