search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனம்
    X

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசர நிலை பிரகடனம்

    • அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • இன்றும் நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. இது பேரழிவு அளவாக இருக்கிறது.

    அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசுக்களால் ஏற்படும் அடர்ந்த புகை, பஞ்சாபின் பல நகரங்களை சூழ்ந்துள்ளது. லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    அவர்கள் சுவாசப் பிரச்சனைகள், கண் பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசரநிலையை அம்மாகாண அரசு விதித்து இருக்கிறது. லாகூர், முல்தான் மாவட்டங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புகைமூட்டம் தற்போது ஒரு தேசிய பேரழிவாக உள்ளது என்றும் இது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் முடிந்துவிடாது. 3 நாட்களுக்குப் பிறகு நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 17-ந்தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து மோசமான நிலை இருப்பதால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகைமூட்டம் அதிகம் உள்ள லாகூர், முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது. அதன்படி அங்கு இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×