search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
    X

    பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

    • இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
    • பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இங்கிலாந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    தேசத்துரோக வழக்கில் தனது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த இந்த கூட்டத்தில் பெண் நீதிபதிக்கு இம்ரான்கான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

    போலீஸ் அதிகாரிகள், ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு பெண் நீதிபதி ஜெபா சவுத்ரிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. மேலும் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் இருந்து சாதாரண அமர்வு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

    இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜராகி, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் அவரது இல்லத்துக்கு 300 போலீசார் அனுப்பப்பட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

    ஆனால் அதனை போலீசார் மறுத்தனர். இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. இது ஆதாரமற்றது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் கடந்த கோர்ட்டு விசாரணையில் இம்ரான்கான் ஆஜராக தவறினார். இதையடுத்து அவர் ஆஜராவதற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×