search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்காததால் குவாட் உச்சி மாநாடு ரத்து- ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
    X

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்காததால் குவாட் உச்சி மாநாடு ரத்து- ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

    • அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
    • ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

    சிட்னி:

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்றும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    ஜப்பானில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் அமெரிக்காவுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    இந்த நிலையில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, "சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் தொடராது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள்.

    அந்த மாநாட்டில் நாங்கள் 4 பேரும் ஒன்றாக ஆலோசிக்க முயற்சிப்போம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இரு தரப்பு கலந்துரையாடலை நடத்த முயற்சிப்போம்.

    இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் அடுத்த வாரம் சிட்னிக்கு வருகை தருவது இன்னும் சாத்தியமாக உள்ளது. நாங்கள் குவாட் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அதை பற்றிய கூடுதல் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

    பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு மிகவும் வரவேற்கத்தக்க விருந்தினராக வருவார். மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×