என் மலர்
உலகம்
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்: புதினை சந்திக்கிறார்
- இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான 21-வது கூட்டம்
- உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
மாஸ்கோ:
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று இரவு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற ராஜ்நாத் சிங்கை இந்திய ரஷ்ய தூதர் வினய்குமார் மற்றும் ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் வரவேற்றனர்.
ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட ஐ.என்.எஸ். துஷில் போர் கப்பல் இன்று கலினியின் கிராட்டில் உள்ள யந்த்ரா கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படும் விழா நடக்கிறது.
இதில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கலந்து கொள்கின்றனர். மல்டி ரோல் ஸ்டெல்த்-கைடட் ஏவுகனை போர் கப்பல் உலகளவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர் கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை) மாஸ்கோவில் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான 21-வது கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கும், ரஷ்ய பிரதிநிதியான ஆண்ட்ராய் பிளசோவ் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.
இதில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு துறையில் ராணுவம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு உள்பட பலத்தரப்பட்ட உறவுகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறும் நாள், இடம் பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.