என் மலர்
உலகம்

அமெரிக்கா-உக்ரைன் இடையே கனிமவள ஒப்பந்தம்: டிரம்புடன், ஜெலென்ஸ்கி நாளை மறுநாள் சந்திப்பு

- கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள்.
- ரஷியாவுடனான போர் நிறுத்தத்திற்கு முதல் படியாக அமெரிக்கா கருதுகிறது.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரஷியாவுடனான போரின் போது உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்கு பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமைகளை தங்களுக்கு கால வரையில்லாமல் அளிக்கப் பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா செல்கிறார். அப்போது இருநாட்டு தலைவர்கள் ரஷியாவுடனான போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவுடன் பொருளாதார கூட்டாண்மையை இறுதி செய்வதற்காக கனிம ஒப்பந்தத்தில் டிரம்பும், ஜெலென்ஸ்கியும் கையெழுத்திடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை பெறுவதற்கும், டிரம்ப் நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நீண்ட கால அமெரிக்க பாதகாப்பு உறுதிபாட்டுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை ரஷியாவுடனான போர் நிறுத்தத்திற்கு முதல் படியாக அமெரிக்கா கருதுகிறது.