என் மலர்
புதுச்சேரி
யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து சோதனை செய்த 4 மாணவர்கள்
- வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
- வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.
அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.