search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் நாளை பந்த் கடைகள் அடைப்பு-பஸ், ஆட்டோக்கள் ஓடாது
    X

    சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் நாளை பந்த் கடைகள் அடைப்பு-பஸ், ஆட்டோக்கள் ஓடாது

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    Next Story
    ×