என் மலர்
புதுச்சேரி
ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியால் புதுச்சேரி தேர்தல் களத்தில் நெருக்கடியை சந்திக்கும் பா.ஜனதா
- பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
- ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் திருபுவனை (தனி) தொகுதி அங்காளன், உழவர்கரை சிவசங்கர், ஏனாம் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோசியேட் எம்.எல்.ஏ.க்கள் என்ற முறையில் பங்கேற்று வருகின்றனர்.
அரசு பதவிகளில் இல்லாத ஆளுங்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைந்தது முதலே வாரிய பதவி கேட்டு வருகின்றனர். இவர்களோடு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சைகளும் தங்களுக்கும் வாரிய பதவி கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஆட்சி அமைந்து 3 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை வாரிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பா.ஜனதாவை ஆதரிப்பதால் தங்கள் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக சட்டமன்றத்தில் அவர்கள் குற்றம்சாட்டினர். சட்டமன்றத்தின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்றத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். தனக்கு அரசு பழைய காரை கொடுத்ததால் கார் அடிக்கடி பழுதாவதாகவும், பெட்ரோல் அலவன்ஸ் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஆனாலும் அங்காளனுக்கு அரசு இதுவரை புதிய கார் வழங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனது பழைய காரின் சாவியை சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார்.
ஓடாமல் இருந்த காரை பட்டி பார்த்து தனக்கு வழங்கியுள்ளதால் செல்லுமிடமெல்லாம் அது மக்கர் செய்து நிற்பதாகவும் மற்ற எம்.எல்.ஏ.க்களின் காருக்கு ரூ.30 ஆயிரம் டீசல் அலவன்ஸ் வழங்கும் நிலையில் தனது காருக்கு வழங்கவில்லை என்பதால் காரை திரும்ப ஒப்படைத்துள்ளதாக அங்காளன் தெரிவித்தார்.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் சிவசங்கர் தனக்கு பா.ஜனதாவில் எம்.பி. சீட் கேட்டு வருகிறார். இவர் ஏற்கனவே உழவர் கரை சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதாவில் வாய்ப்பு கேட்டு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதனால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிட வாய்ப்பளிக்காத பட்சத்தில் சிவசங்கர் எம்.எல்.ஏ. என்ன நிலைப்பாடு எடுப்பார் என தெரியவில்லை.
மற்றொரு பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஏனாம் தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்து வருகிறார்.
இதோடு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் புகார் தெரிவித்து வருகிறார். இதனால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ.வும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி புதுவை பாராளுமன்ற தொகுதியில் களம் இறங்கும் பா.ஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.