search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதாவின் அச்சுறுத்தலால் தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை- திருச்சி சிவா எம்.பி.
    X

    பா.ஜனதாவின் அச்சுறுத்தலால் தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை- திருச்சி சிவா எம்.பி.

    • திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.
    • பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொது கூட்டம் வில்லியனூரில் நடந்தது.

    பொதுகூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி, புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

    ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சட்டம் உண்டு. திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.

    ஆனால் இது எல்லாவற்றையும் ஒன்றாக மாற்றி பொதுசிவில் சட்டம் என மாற்றினால் அதில் குழப்பம் வரும். சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது கடமைகளில் முக்கியமான ஒன்று.

    அதனால் தான் யார் இது தொடர்பாக மனு கொடுத்தாலும் டெல்லியில் தி.மு.க. இருக்கும் வரை யாரும் அஞ்ச வேண்டாம். கவலை கொள்ள வேண்டாம் என கூறுவேன்.

    பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம். எங்களை விட வேகமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். பொது சிவில் சட்டம் வரக்கூடாது என்பதற்கான எல்லா முயற்சிகளையம் எடுக்க வேண்டும் என எங்களிடம் கூறியுள்ளார்.

    பொது சிவில் சட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 8 மாதத்தில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் எல்லாரையும் ஒன்றாக நடத்துகின்ற அரசாங்கம் வர வேண்டும்

    இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

    இதன்பின்னர் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில காலமாகவே அதிகார மையங்களை வைத்து பா.ஜனதா அச்சுறுத்தும் போக்கு நடைபெற்று வருகிறது.

    தற்போது தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக எந்த வகையிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவு கிடையாது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பணி எளிதாகும்.

    அதன் மூலம் தி.மு.க. வெற்றி நிச்சயமாக கிடைக்கும். மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளனர். மத்திய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களையும், காரணங்களையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×