search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.- காங்கிரஸ் வெளிநடப்பு
    X

    கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.- காங்கிரஸ் வெளிநடப்பு

    • தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர்.
    • கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இன்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 9.25 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கார் மூலம் புதுச்சேரி சட்ட சபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை செயலாளர் தயாளன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கவர்னரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். சட்ட சபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கவர்னரை வரவேற்றனர். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தவுடன், காலை 9.30 மணிக்கு சபை நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    கவர்னர் தனது உரையை தொடங்க முயன்றபோது, எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், செந்தில் குமார், சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் எழுந்து, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கவில்லை.


    இந்த நிலையில் கவர்னர் உரையில் எந்த மக்கள் நலத்திட்டமும் இருக்காது என குற்றம்சாட்டி விமர்சித்து பேசினர்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் என வைத்துக்கொண்டாலும், நான் என்ன சொல்லப் போகிறேன் என முழுமையாக கேட்டுக்கொண்டு, அதற்கு பின் பதில் வைத்தால் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். தயவு செய்து அமர்ந்து என்ன உரையாற்றப் போகிறேன் என்பதை உன்னிப்பாக கேளுங்கள், தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை ஆளும் கட்சி திருத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் அற்புதமான சிந்தனை இருந்தால் அதையும் எடுத்து வையுங்கள். அதை ஆளும் கட்சி எடுத்துக் கொள்ளட்டும். தயவு செய்து அமருங்கள், நான் எனது உரையை தொடங்குகிறேன் எனக்கூறி உரையாற்ற தொடங்கினார்.

    இதையேற்று தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர். சுமார் 15 நிமிடங்கள் அமர்ந்து கவர்னர் உரையை அமைதியாக கேட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை. கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறினர்.

    தொடர்ந்து 9.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

    Next Story
    ×