என் மலர்
புதுச்சேரி

மகளிர் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனாவிடம் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. சரமாரியாக கேள்வி எழுப்பிய காட்சி.
எம்.எல்.ஏ. பரிந்துரையின்றி உதவித் தொகை எப்படி வழங்க முடியும்?- அதிகாரியிடம், எதிர்கட்சித் தலைவர் கேள்வி
- மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை எதிர்க்கட்சித் தலைவர் முற்றுகை.
- உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக அதிகாரி விளக்கம்.
புதுச்சேரி:
புதுச்சேரியல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வில்லியனூர் தொகுதியில் உள்ள கொம்பாக்கம் வார்டு பகுதியை சேர்ந்த 40 பேருக்கு முதியோர் உதவித்தொகை எம்.எல்.ஏ. பரிந்துரை இன்றி வழங்கப்பட இருந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவார் என பயனாளிகளுக்கு கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது. தகவலறிந்த எதிர்கட்சித்தலைவர் சிவா, தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், ஆதரவாளர்களோடு வந்து குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்.
அப்போது இயக்குனர் முத்துமீனா அலுவலகத்தில் இல்லை. அவருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வரச்சொல்லும்படி ஊழியர்களிடம் சிவா வலியுறுத்தினார். அரை மணி நேரத்திற்கு பிறகு இயக்குனர் முத்துமீனா அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரையின்றி உதவித்தொகை வழங்க எப்படி முடிவு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
நியமன எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில், இறப்பு காலியிடங்களை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நியமன எம்.எல்.ஏ.க்கு தொகுதியே இல்லாத போது எந்த அடிப்படையில் இறப்பு காலியிடம் அளிக்க முடியும்.? என சிவா கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் இயக்குனர் முத்துமீனா திணறினார். உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைப்பதாக கூறினார். இதன்பின் எதிர்கட்சி த்தலைவர் சிவா அங்கிருந்து, ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.






