search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நாயுடன் சென்றால் மரியாதை: பால் தரும் மாட்டை பிடித்து சென்றால் அலட்சியமாக பார்க்கின்றனர்-  விவசாயி ஆதங்கம்
    X

    நாயுடன் சென்றால் மரியாதை: பால் தரும் மாட்டை பிடித்து சென்றால் அலட்சியமாக பார்க்கின்றனர்- விவசாயி ஆதங்கம்

    • விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்.
    • நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கால்நடைத் துறை சார்பில் மாடு வளர்ப்போருக்கு கறவை எந்திரம் வழங்கும் விழா காரைக்கால் மதகடி கிராமத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் திருமுருகன் பயனாளிகளுக்கு எந்திரத்தை வழங்கி பேசியதாவது:-

    வறட்சி, கனமழை, புயல் போன்ற காலங்களில் பெருமளவில் பாதிக்கப்படுவது விவசாய பூமியான காரைக்கால்தான். விவசாய நிலங்கள் பசுமையாக இருந்தால்தான் கால்நடைகள் தரமான பாலை கொடுக்க முடியும்

    காரைக்காலில் ஒரு மாதத்திற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் வெளி சந்தையில் இருந்து வாங்குகிறோம். காரைக்காலில் நிறைய மாடுகள் இருந்தாலும் அதன் பால் தரம் குறைவாக இருக்கிறது. காரணம் இயற்கையாக கிடைக்க கூடிய புற்கள் கிடைப்பதில்லை.

    மாடு வளர்க்காதவர்களுக்கு திட்டங்களை கொடுக்காதீர்கள். தகுதியானவர்களை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துங்கள்.


    நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியாத இன்றைய காலகட்டத்தில் மாடுகளை வளர்த்து தரமான பால் கொடுக்கும் விவசாயிகளை கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பேசிய விவசாயி ஒருவர் தாய்ப் பாலுக்கு இணையானது மாட்டுப்பால். ஆனால் இதை பலரும் உணரவில்லை. மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மரியாதை இல்லை. மாட்டை பிடித்து கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் ஓரமா போயா...? என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.

    ஆனால் நாய் பிடித்து நடைபயிற்சி செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். நாய்க்கு கொடுக்கும் மரியாதை பால் தரும் மாட்டிற்கு இல்லை என கூறினார்.

    விவசாயி பேச்சை விழாவில் கூடியிருந்தோர் கைத்தட்டி வரவேற்றனர்.

    Next Story
    ×