search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மர் இயக்குனர் விரைவில் மாற்றம்- புதிய பதவிக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது
    X

    ஜிப்மர் இயக்குனர் விரைவில் மாற்றம்- புதிய பதவிக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது

    • ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
    • இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

    ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.

    இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×