search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீண்டும் விஷவாயு பரவல்?-  மேலும் ஒருவர் மயக்கமானதால் பொதுமக்கள் பதட்டம்
    X

    மீண்டும் விஷவாயு பரவல்?- மேலும் ஒருவர் மயக்கமானதால் பொதுமக்கள் பதட்டம்

    • வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
    • 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து விஷ வாயு பரவியது.

    விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவில் வசிக்கும் செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அந்த பகுதியின் இறுதியில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது. இதனால் பொதுப்பணித் துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் 4-வது தெருவில் வசிக்கும் புஷ்ப ராணி (வயது38) கழிவறைக்கு சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் திரண்டு நிற்கின்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×