என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுச்சேரியில் தனிநபர் வருமானம் 7.61 சதவீதம் உயர்வு- கவர்னர் உரை
- புதுவை நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.
- 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
சட்டசபையில் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-
நினைவுகூரத்தக்க இத்தருணத்தில் அவை உறுப்பினர்களுக்கும், புதுவை மக்களுக்கும் என் அன்பான வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி சட்டசபையில் 2024-25ம் ஆண்டுக்கான எனது உரையை நிகழ்த்து வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 15-வது சட்ட சபையின் 5-வது கூட்டத் தொடரை தொடங்கி வைத்து பெருமை வாய்ந்த இந்த அவையில் என் முதல் உரையை ஆற்றுகிறேன். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சுமூகமாகவும், அமைதியான முறையிலும் நடந்ததை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
தேர்தலை சீராக நடத்தியதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் துறைக்கும், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இத்தருணத்தில் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதுமின்றி தேர்தல் நடைபெற்றது. இதற்காக காவல் துறை பாராட்டுக்குரியது.
தொடர்ந்து 3-வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்றமைக்காக நரேந்திர மோடிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு, முதலீடுகள் போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
2016-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத்தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சார்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் 7-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக மத்திய அரசு 2023-24ம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது.
இதன்மூலம் சுமார் 16 ஆயிரம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரும், ஆயிரத்து 500 ஆசிரியர், ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசுக்கு தனது நன்றியை தெரிவிக்கிறது.
ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோர் நலனுக்கு முன்னுரிமை அளித்தும், சாலைகள், குடிநீர் வழங்கல், துப்புரவு, மின்விசை, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற முக்கியமான துறைகளின் வளர்ச்சியை உறுதிசெய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
நலத்திட்டங்கள் நலிவுற்ற மக்களிடம் விரைவாக சென்றடையும் பொருட்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நேரடி போட்டி தேர்வுகள் மூலம் இந்த அரசு நிரப்பி வருகிறது. அதனடிப்படையில் கடந்த நிதி ஆண்டில் நேரடி போட்டி தேர்வு மூலம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள 1,119 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச் சகத்தின் பாராளுமன்ற குழு புதுச்சேரி அரசு துறைகளின் செயல்பாடுகளை பாராட்டியும், நிர்வாக செயல்பாடுகளில் முழு திருப்தியும் வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சி பரப்பின் நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால், அரசு செலவினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனை உறுப்பினர்கள் நன்கு அறிவர்.
இருப்பினும் ஏழைகளின் நலனுக்காக தேவையான நிதியை வழங்குவதை அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.12 ஆயிரத்து 250 கோடியில் ரூ.11 ஆயிரத்து 464 கோடி அதாவது 93.58 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினம் முந்தைய ஆண்டு செலவினத்தோடு ஒப்பிடுகையில் 6.55 சதவீதம் அதிகமாகும்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் நிதி குறியீடாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி திகழ்கிறது. கடந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ.48 ஆயிரத்து 52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7.54 சதவீதம் கூடுதலாகும்.
புதுவையின் தனிநபர் வருமானம் 2022-23-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 469-லிருந்து 2023-24ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. இது 7.61 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
இவ்வாறு கவர்னர் உரையாற்றினார்.
தொடர்ந்து கடந்த ஆண்டில் பல்வேறு துறைகளின் கீழ் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள், சாதனைகளை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்