என் மலர்
புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனையை விரிவாக்க மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- மத்திய மந்திரி எல். முருகன் தகவல்
- வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுகிறோம்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால மக்கள் நல பணிகள் பற்றி பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் எழுதிய புத்தக கருத்தரங்கம் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் நடந்தது.
பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி தலைவர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் நாட்டு மக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற்றுள்ளார்கள். புத்தகத்தில் பல்வேறு துறை சார்ந்தோர் முக்கியக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து செயல்படுகிறது.
2014 வரை 7 எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. 8 ஆண்டுகளில் 14 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளைக் கொடுத்துள்ளோம்.
புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளது.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.






