search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காங்கிரஸ் வேட்பாளர் யார்? நாராயணசாமி-வைத்திலிங்கம் இடையே கடும் போட்டி
    X

    காங்கிரஸ் வேட்பாளர் யார்? நாராயணசாமி-வைத்திலிங்கம் இடையே கடும் போட்டி

    • கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
    • வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது.

    கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அளவிலான தொகுதிகளை பெற காங்கிரஸ் கடும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும், புதுவை தொகுதியை பெற தனி கவனம் செலுத்தினர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் தி.மு.க. 6 தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

    இதன் மூலம் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக தி.மு.க. கருதுகிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தி வந்தது.

    அதே நேரத்தில் காங்கிரசார் புதுச்சேரியை தங்களின் கோட்டை என நிரூபிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் புதுச்சேரி தொகுதியை பெறுவதில் தி.மு.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

    சிட்டிங் தொகுதி என்ற முறையில் புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். காங்கிரசில் வைத்திலிங்கம் எம்.பி. தவிர முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சீட் கேட்டு வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வேட்பாளர் யார்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஆனால் சிட்டிங் எம்.பி. என்ற முறையில் கூடுதலான வாய்ப்புகளை வைத்திலிங்கமே பெற்றுள்ளார். இதனிடையே வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் கடந்த 10 ஆண்டுக்கு முன்புள்ள விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டு காங்கிரசுக்கு வாக்களிப்பீர் என கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கை சின்னத்தை வரைந்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×