search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "action films"

    • வல்ச்சர் ஸ்டண்ட் விருதுகள் 2023ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது
    • பதான், ஜவான் ஆகிய படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தன

    ஆக்ஷன் திரைப்படங்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்தாலும், திரைப்பட விருதுகளில் சண்டை காட்சி பிரிவில் விருது வழங்குதல் குறைவு.

    சிறந்த நடிகர், நடிகையர், வில்லன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், சண்டை காட்சிகளை வடிவமைப்பவர்களுக்கு மக்களின் பாராட்டுகளே பெரிய விருதாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த வருடத்திலிருந்து அமெரிக்காவின் வாக்ஸ் மீடியா நெட்வொர்க்ஸ் (Vox Media Networks) நிறுவனத்தின் ஒரு அமைப்பான வல்ச்சர் (Vulture) எனும் பத்திரிகை, வல்ச்சர் ஸ்டண்ட் அவார்ட்ஸ் (Vulture Stunt Awards) என திரைப்படங்களில் இடம்பெறும் பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்கு பரிசுகள் வழங்க தொடங்கியது.

    சண்டை காட்சிகள் என ஒரே பட்டியலிடாமல், வான்வெளி, தரை, வெடி விபத்து காட்சிகள், சேசிங் என பல உட்பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுவது இதுவரை திரையுலகில் இல்லாத சிறப்பான அம்சம் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    2024க்கான விருதுக்கு 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியான படங்களில் உலகின் முன்னணி ஆக்ஷன் கதாநாயகர்களான டாம் க்ரூஸ் (Tom Cruise) மற்றும் கீனு ரீவ்ஸ் (Keanu Reeves) ஆகியோரின் ஹாலிவுட் படங்கள் பட்டியலில் உள்ளன.

    இந்நிலையில், இந்தி திரையுலக முன்னணி கதாநாயகனான ஷாருக் கான் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "பதான்" (Pathan) மற்றும் "ஜவான்" (Jawan) எனும் இரு படங்களும் போட்டியில் இடம்பெற்றுள்ளன.


    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் வெளியான பதான், சிறந்த வான்வெளி ஸ்டண்ட் காட்சி மற்றும் சண்டை காட்சி பொது பிரிவு என இரு பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் பதான் ரூ.1055 கோடி வசூல் செய்தது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியான ஜவான், சிறந்த வாகன ஸ்டண்ட், ஆக்ஷன் படங்களில் சிறந்த ஸ்டண்ட், சிறந்த ஆக்ஷன் திரைப்படம் என 3 பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் ஜவான் ரூ.1160 கோடி வசூல் செய்தது.

    போட்டியில் இந்திய ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மகிழும் வகையில் இப்படங்கள் விருதுகளை வெல்லுமா என்பது மார்ச் 4 அன்று தெரிந்து விடும்.

    ×