search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against Sivanandi"

    ஓய்வுபெற்ற ஐ.ஜி. சிவனாண்டி மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #IGSivanandi
    புதுடெல்லி:

    ‘சவுத் இந்தியா பாட்டிலிங்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று சென்னையை சேர்ந்த பாண்டியராஜ் என்பவரை சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் அணுகினர். இதை நம்பி, தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் ரூ.50 லட்சத்தை பாண்டியராஜ் முதலீடு செய்தார். ஆனால் சொன்னபடி லாபம் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் விசாரித்தபோது, பணத்தை முதலீடு செய்ததற்கான எந்த ஆதாரமும், அந்த நிறுவனத்திடம் இல்லை என்று தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பாண்டியராஜ், இதுகுறித்து 2015-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதையடுத்து இந்த புகாரை வாபஸ் பெறும்படி, தன்னை, அப்போது பதவியில் இருந்த ஐ.ஜி.சிவனாண்டி மிரட்டியதாக பாண்டியராஜ் புகார் செய்தார். இந்தநிலையில், இந்த மோசடி வழக்கு விசாரணைக்காக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாண்டியராஜ் சென்றார்.

    அப்போது, அவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயற்சித்தது. அந்த கும்பலிடம் இருந்து தப்பிய பாண்டியராஜ், வேப்பேரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஒரு வக்கீல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான வக்கீலுக்கு, முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் வீட்டை முற்றுகையிட்டு 70-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த வக்கீல்கள் மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் பலரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ரூ.50 லட்சம் மோசடி வழக்கு, புகார்தாரர் பாண்டியராஜை மிரட்டியதும், அவரை கடத்தியது குறித்த வழக்கு, தலைமை நீதிபதி வீட்டை முற்றுகையிட்ட வழக்கு ஆகிய 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன்படி விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘ரூ.50 லட்சம் மோசடி வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்கை முடித்து வைத்து, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதை எதிர்த்து பாண்டியராஜ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘மோசடி வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று பாண்டியராஜை ஐ.ஜி. சிவனாண்டி மிரட்டியதற்கும், தலைமை நீதிபதி வீட்டில் ரகளை செய்த வக்கீல்களின் செல்போனில் சிவனாண்டி பேசியதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், இந்த வழக்குகளை எல்லாம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகிறேன்’ என்று உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் சிவனாண்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வரராவ் ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், ‘மனுதாரர் சிவனாண்டிக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர் பாண்டியராஜ் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஐ.ஜி.சிவனாண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×