search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ahmedabad felicitated"

    பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்ற பின்னர் முதன்முறையாக அகமதாபாத் வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வெற்றிக்கு பின்னர் முதன்முறையாக இன்று மாலை அகமதாபாத் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
     
    அகமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய மோடி, சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 மாணவ-மாணவிகளின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்த வெற்றிவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதா, வேண்டாமா? என்று நேற்றுவரை பெரிய மனக்குழப்பத்தில் இருந்தேன். சூரத் தீவிபத்தில் தங்களது குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் உறவினர்களும் அவர்களது எதிர்காலத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களின் மனக்காயங்களை ஆற்றும் சக்தியை அளிக்குமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர்  தெரிவித்தார். 

    ஆறாம்கட்ட பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக அமோக வெற்றிபெற்று 300-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று நான் பேசினேன். அதனால் என்னை பலர் கேலி செய்தனர். ஆனால், நான் கணித்தவாறு வலிமையான அரசாங்கம் அமைய மக்கள் பெருவாரியான வெற்றியை எங்களுக்கு அளித்துள்ளனர்.

    அடுத்த பிரதமராக பதவியேற்க வருமாறு நேற்றிரவு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். அதற்காக உங்கள் அனைவரிடமும் ஆசிபெற நான் இன்று இங்கி வந்திருக்கிறேன். வரும் ஐந்தாண்டுகள் 1942-1947 ஆண்டுகளுக்கிடையிலான காலக்கட்டத்தைப்போல் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். உலக வரிசையில் இந்தியா முன்னர் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் ஆண்டுகளாக அடுத்த ஐந்தாண்டுகள் அமையும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

    அவர் பேசி முடித்த பின்னர் அங்கு திரண்டிருந்தவர்கள் தங்களது கைபேசியில் உள்ள விளக்குகளால் மேடையை நோக்கி ஓளிவீச வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர், அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார்.

    இன்றிரவு தனது தாயாரை சந்திக்கும் பிரதமர் மோடி அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னர் நாளை வாரணாசி தொகுதிக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    ×