என் மலர்
நீங்கள் தேடியது "Akira Toriyama"
- மங்கா காமிக்ஸ் வகைகள் பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன
- ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, திசுக்களுக்கு அழுத்தம் தருவதால் சப்டியூரல் ஹீமடோமா ஏற்படுகிறது
"காமிக்ஸ்" (comics) எனப்படும் படக்கதை புத்தகங்களில் 19-வது நூற்றாண்டில் ஜப்பானில் உருவான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள் "மங்கா" (manga) எனப்படும்.
மங்கா காமிக்ஸ் வகைகளில் நகைச்சுவை, குடும்ப உறவுகள், மர்மம், துப்பறிதல், அறிவியல் உள்ளிட்ட பல வகையான கதைகள் தற்போது வரை வெளிவந்திருக்கின்றன.
மங்கா காமிக்ஸ் வகைகள், ஜப்பானிய மொழிகளில் இருந்து பிற மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.
பிரபலமான ஜப்பானிய மங்கா கதைகளில் "டிராகன் பால்" (Dragon Ball) எனும் படக்கதைகள் முன்னணியில் உள்ளன.
அகிரா டொரியாமா (Akira Toriyama) என்பவர் எழுதி உருவாக்கிய "டிராகன் பால்" கதைகள், பல மங்கா எழுத்தாளர்களுக்கு படைப்பாற்றலில் ஆர்வம் தந்து, அவரைப் போலவே எழுத்தாளர்களாக உருவெடுக்க வழிவகுத்தது.
இதுவரை, உலகெங்கும் 260 மில்லியனுக்கும் மேல் "டிராகன் பால்" கதைகள் விற்பனை ஆகி உள்ளன.
1984ல் "டிராகன் பால்", தொலைக்காட்சி தொடர் வடிவில் உருவானது. இதை தொடர்ந்து பல "டிராகன் பால்", திரைப்படங்களும், வீடியோ விளையாட்டுகளும் உருவாகின.
"சோன் கோகு" (Son Goku) எனும் சிறுவன், டிராகன்கள் உள்ள பல மந்திர பந்துகளை ஒவ்வொன்றாக சேகரித்து, பூமியை அழிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பூமியை காப்பாற்ற போராடுவதே இக்கதைகளின் மையக்கரு.
இந்நிலையில், "சப்டியூரல் ஹீமடோமா" (subdural hematoma) எனும் மூளையில் உண்டாகும் ஒரு ஆபத்தான நிலையினால், மார்ச் 1 அன்று, தனது 68-வது வயதில் அகிரா டொரியாமா காலமானார்.
குறுகிய நேரத்தில் மூளையில் ரத்தம் பெருமளவில் கசிந்து, மூளையில் நிறைந்து, மூளைத்திசுக்களுக்கு அழுத்தம் தரும் நிலையை சப்டியூரல் ஹீமடோமா என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.
80களில் தங்களின் குழந்தைப் பருவ காலத்தில், டொரியாமாவின் மங்கா படக்கதைகளை விரும்பி படித்து, அவற்றை தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கருதும் டொரியாமாவின் ரசிகர்களுக்கு அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.