search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andra Farmer"

    ஆந்திராவில் 25 ஏக்கர் நிலத்தை மீட்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி விவசாயி குடும்பத்துடன் பிச்சை எடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. #AndhraFarmer
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் ராஜு. விவசாயியான இவருக்கு கிழக்கு கோதாவரி மாவட்டம் மாதவரம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை அவரது உறவினர்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக கூறி வருவாய்த்துறையில் புகார் செய்தார். நிலத்தை மீட்டு கொடுக்க அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் ராஜு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சாலையில் நடந்து செல்பவர்களிடமும், கடை கடையாக ஏறியும் பிச்சை கேட்டார்.

    தங்களது கழுத்தில் “அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. எனவே எங்களுக்கு பிச்சை போடுங்கள்” என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை மாட்டியபடி பிச்சை எடுத்தனர்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, “எனது 25 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் பறித்து விட்டனர். அதை மீட்க 2 ஆண்டுகளாக போராடி வருகிறேன். லஞ்சப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரி கூறுகிறார். பணம் இல்லாத எனக்கு பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

    தயவு செய்து எனக்கு பிச்சை போடுங்கள். அப்போதுதான் நான் லஞ்சப் பணத்தை கொடுக்க முடியும். லஞ்சம் கொடுத்தால் எந்த பணியும் நடக்கும். நான் லஞ்சம் கொடுக்காததால் எனது நிலத்தை இழந்து விட்டேன்.

    இதனால் பிச்சை எடுத்து லஞ்சப்பணத்தை கொடுக்க முடிவு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கர்னூல் மாவட்ட கலெக்டர் கூறும் போது, “ராஜுவின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இதனால் அவர் மீது வருவாய்த்துறை மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அவரது நிலத்தை உறவினர்கள் அபகரித்து இருந்தால் அவர் கோர்ட்டை அணுகி இருக்க வேண்டும்” என்றார்.   #AndhraFarmer
    ×