search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AntonioGuterres"

    காஷ்மீர் தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #UN #AntonioGuterres
    நியூயார்க் :

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி துணை ராணுவவீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்தியா மட்டும்இன்றி உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு உலக நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன.

    ஐ.நா.சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்ததோடு, தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் காஷ்மீர் தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 துணை ராணுவவீரர்களை பலி கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமான செயல். இந்த தாக்குதலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலை ஏற்பாடு செய்தவர்கள், அதற்கு நிதியுதவி அளித்தவர்கள், அதனை வழிநடத்தியவர்கள் என அனைத்து தரப்பினரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளும், புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளன. இந்த மோசமான அனுபவத்தில் இருந்து இந்திய மக்களும், அரசும் விரைவில் மீளவேண்டும்.

    உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது. எங்கே நடந்தாலும், எதற்காக நடந்தாலும், எப்போது நடந்தாலும் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்க முடியாது.

    பயங்கரவாத நடவடிக்கைகளால் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் போது அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு உட்பட்டு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் ஆசாரின் பெயரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கைக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. #PulwamaAttack #UN #AntonioGuterres 
    ×