என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashtatik Palakaras"
- அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்.
- எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.
அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும் இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் கோபுரங்கள், வாயில்கள், சுவர்கள், கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் காணப்படுகின்றனர். இனி ஒவ்வொருவரையும் பற்றிக் காண்போம்.
இந்திரன்
இவர் கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
அக்னி தேவன்
இவர் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய வாகனம் ஆட்டுகிடா ஆகும். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.
யமன்
இவர் தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவார். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். யமனை வழிபட்டால் தீவினைப்பயன்களை அகற்றி நல்வினைப் பயன்களை பெறலாம்.
நிருதி
இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
வருண பகவான்
இவர் மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு, குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன. ஐவகை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும்.
வாயு பகவான்
வாயு வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக உள்ளவர். இவர் வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுளையும் பலத்தையும் பெறலாம்.
குபேரன்
இவர் வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
ஈசானன்
இவர் வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்