search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bathing is essential in winter"

    • குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான்.
    • ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.

    குளிர் காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் உறைய வைத்துவிடும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை மாற்றி ஓரிரு நாட்கள் குளியலுக்கு ஓய்வு கொடுத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.

    அப்படி குளிர் காலத்தில் குளியலை தவிர்ப்பது நல்லதல்ல. குளிர் காலத்திலும் ஏன் தவறாமல் குளிக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.


    உடல் சுகாதாரம்

    தனிப்பட்ட முறையில் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கு தவறாமல் குளிப்பது முக்கியமானது. கோடை காலத்தை ஒப்பிடும்போது குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காமல் இருக்கலாம். ஆனாலும் உடல் தொடர்ச்சியாக எண்ணெய்யை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இறந்த சரும செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்முறையும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

    வழக்கமாக குளிக்கும் செயல்முறையை தொடர்வது இந்த அசுத்தங்களை நீக்க உதவும். உடல் துர்நாற்றம், சருமத் தொற்றுகள் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவும். பொதுவாக குளிர் காலத்தில் சருமம் வறட்சி அடையும், சரும எரிச்சலும் ஏற்படும். குளியல் மூலம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த துணைபுரியும்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த நீரில் கலந்திருக்கும் மிதமான வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை துரிதமாக கொண்டு செல்ல உதவிடும்.

    சளி, காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை உடல் திறம்பட எதிர்த்து போராடவும் உதவிடும். அத்துடன் சுடு நீர் குளியல் மூக்கடைப்பை தடுக்கவும், நாசி துவாரங்களை திறக்கவும் வழிவகை செய்யும்.


    மன ஆரோக்கியம்

    குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் பருவ கால நோய்த்தொற்றுகள் காரணமாக குளிர் காலம் மன ஆரோக்கியத்துக்கு சவாலாக இருக்கும். இதனை எதிர்த்து போராட சூடான குளியல் பயனுள்ளதாக அமையும்.

    இந்த குளியல் உடலை தளர்வடையச் செய்து உடல் ஓய்வுக்கு வித்திடும். மன அழுத்தத்தை குறைத்து நல்ல உணர்வுகளை கொண்ட ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டி மன நிலையை மேம்படுத்தும்.


    சரும ஆரோக்கியம்

    குளிர் காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை மற்றும் உட்புற வெப்பம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை அகற்றி சரும வறட்சி மற்றும் சரும எரிச்சலுக்கு வழிவகுக்கும். அந்த சமயத்தில் குளிக்கும் வழக்கத்தை தொடர்வது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

    ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது, குளியல் எண்ணெய்களை உபயோகிப்பது போன்றவை சருமத்திற்கு நன்மை பயக்கும்.

    சருமத்தை மென்மையாக்கவும் உதவும். லோஷன்கள் மற்றும் கிரீம்களை பயன்படுத்துவதும் குளிர்கால சரும வறட்சியை எதிர்த்து போராட உதவிடும்.

    தூக்கம்

    வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவது தசைகளை தளர்த்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கும் வித்திடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் அவசியம்.

    குறிப்பாக குளிர்ந்த கால நிலை மற்றும் அழுத்தங்களில் இருந்து உடல் மீள்வதற்கு தூக்கம் அவசியமானது. அதற்கு குளியல் போடுவது முக்கியமானது.

    ×