search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhima Ekadasi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிர்ஜல ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளை பெற்றதாக கூறுவார்கள்.
    • நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.

    ஒரு சமயம் முரன் என்னும் அசுரன், பிரம்மாவை நோக்கி பல்லாயிரம் வருடம் தவம் செய்தான். அந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடம் இருந்து பல அரிய வரங்களைப் பெற்றான்.

    எப்பொழுதுமே பணம், பதவி, அதிகாரம் ஆகியவை சேரும் இடத்தில், பிரச்சினைகளும் வந்துசேரும். பெரும் தவத்தின் பயனாக, தான் பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தினான், முரன். அவன் மூன்று உலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களை துன்புறுத்தினான்.

    காட்டில் உள்ள ஒரு பலம் வாய்ந்த சிங்கத்தைக் கண்டு எளிய விலங்குகள் நடுங்குவது போல், பிரம்மா கொடுத்த வரத்தின் காரணமாக, முரனைக் கண்டு தேவர்களும், முனிவர்களும் நடுங்கினர். முரனுக்கு அழிவு பெண்ணால் மட்டும் தான். மற்ற வழியில் அவனுக்கு அழிவு ஏற்படாது என்பது அவன் பெற்றிருந்த வரம்.

    இந்த நிலையில் தேவர்களும், முனிவர்களும் பிரம்மலோகம் சென்றனர். பிரம்மன் வசிக்கும் அந்த உலகத்தை 'சத்திய லோகம்' என்றும் கூறுவார்கள். அங்கு பிரம்மா அமர்ந்திருந்தார்.

    அவரிடம், "சுவாமி.. எங்கள் நிலையை பாருங்கள். முரனை அழிக்கும் வழி என்ன என்று கூறுங்கள்" என்றார். பிரம்மா, "அவனை படைத்தவன் நான். வரமும் நான்தான் கொடுத்தேன். அவனை அழிக்கக்கூடிய ஆற்றலைப் பற்றி நீங்கள் திருக்கயிலாயம் சென்று கேளுங்கள்" என்றார்.

    தேவர்களும், முனிவர்களும் திருக்கயிலாயம் சென்றபோது, அங்கு சிவ பெருமான் யோகத்தில் இருந்தார். யோகத்தில் இருந்த சிவபெருமானை பார்த்து அவர்கள், "இறைவா.. முரன் எங்களை துன்புறுத்துகிறான். இதற்கு நீங்கள்தான் சரியான வழி காட்ட வேண்டும்" என்றனர்.

    அதற்கு சிவபெரு மான், "நீங்கள் வைகுண்டம் செல்லுங்கள். உங்களுக்கு அங்கு நல்ல வழி காத்திருக்கிறது" என்றார். அதன்படி தேவர்களும், முனிவர்களும் வைகுண்டம் சென்று, "நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, எங்களுக்கு வழிகாட்டு" என்று திருமாலை வணங்கி துதித்தனர்.

    அவர் தனது கதாயுதத்துடன் முரனை எதிர்த்து யுத்தம் செய்தார். முரன் ஆயிரம் ஆண்டுகள் கடும் யுத்தம் செய்தான். இனி முரன் அழியக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று கருதி, அங்கிருந்த ஒரு குகையில் சென்று பகவான் யோக சயனத்தில் இருந்தார்.

    அந்த யோக சயனத்தின் பொழுது ஒரு பெரிய ஒளி அவர் உடலில் இருந்து தோன்றியது. அதே நேரத்தில் முரனும் அந்த குகையின் உட்புறம் வந்தான். அந்த ஒளி, ஒரு பெண்ணாக மாறி முரனை எரித்தது. இதே நேரத்தில் தேவர்களும், முனிவர்களும் குகையின் அருகே வந்து மகாவிஷ்ணுவை துதி செய்தனர். அந்த பெண்ணே 'ஏகாதசி'. அவள் தோன்றிய தினமே 'ஏகாதசி திதி' என்றும் சொல்கிறார்கள்.

    சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்

    விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்

    லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்

    வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்!

    தேவர்கள் மேற்கண்ட துதியை சொல்லி, திருமாலை வழிபட்டனர். அப்போது அவர், "முரன் அழிந்த இந்த ஏகாதசி அன்று, யார் என்னை வழி படுகிறார்களோ, அவர் களுக்கு சகல செல்வத்தையும் அருள்வேன்" என்றார். ஏகாதசி அன்று நாம், பகவான் நாமத்தைச் சொல்ல வேண்டும்.

    ஏகாதசி அன்று விரதம் இருந்து மறுநாள் காலை துவாதசி அன்று உண்பதை 'பாரணை' என்பார்கள். அன்று உணவில் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் முதலியவற்றை சேர்த்து உண்பார்கள். துவாதசி அன்று பகலில் உறங்கக்கூடாது.

    ஏகாதசி அன்று விரதம் இருக்கும் பொழுது கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தீராத நோய் உள்ளவர்கள், சிறு குழந்தைகள், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோர், தேன், வேக வைத்த கிழங்குகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். மேலும் இவற்றை கோவிந்தன் நாமத்தை சொல்லி உண்பதால் விரத பங்கம் ஏற்படாது.

    வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளை சேர்த்து, ஆண்டு ஒன்றுக்கு 24 அல்லது 25 ஏகாதசி வரும். இவற்றில் மிக விசேஷமானது வைகுண்ட ஏகாதசி ஆகும். ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்பார்கள். இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.

    ஒரு சமயம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு, 'நாம் விரதம் எதுவும் மேற்கொள்ளாமல் இருக்கிறோமே' என்ற ஏக்கம் உண்டாயிற்று. மற்றவர்கள் ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் பொழுது, தான் மட்டும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு ஏற்பட்டது.

    வேத வியாசரிடம் சென்று "மகரிஷியே.. என் சகோதரர்களும், என் தாயாரும், என் மனைவியும் ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் இருக்கும் விரதத்தை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு எப்பொழுதும் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளதால், என்னால் விரதம் இருக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்" என்றான்.

    அதற்கு வேதவியாசர் "பீமா.. உன் மனதில் பகவான் இருக்கிறார். உனது எண்ணம் தெரியும். பொதுவாக 24 ஏகாதசி என்று சொன்னாலும் மொத்தத்தில் 25 ஏகாதசிகள் வரும். இப்பொழுது நான் உனக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

    ஆனி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி அன்று, நீ ஜலம் (நீர்) கூட அருந்தாமல் உபவாசம் இரு. அப்படி இருந்தால், உனக்கு இந்த வருடம் முழுவதும் ஏகாதசி உபவாசம் இருந்த பலன் கிடைக்கும்" என்றார். அதனால் ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை 'நிர்ஜல ஏகாதசி' என்றும், 'பீம ஏகாதசி' என்றும் அழைப்பார்கள்.

    இந்த ஏகாதசி அன்றுதான் பீமன் விரதம் இருந்து பகவானின் அருளைப் பெற்றதாக கூறுவார்கள். அதனால் ஏகாதசி விரதம் வருடம் முழுவதும் இருக்க முடியாதவர்கள், இந்த ஒரு நாள் ஏகாதசி விரதம் இருந்தால் போதும். வருடம் முழுவதும் இருந்த பலன் கிடைக்கும். நீண்ட ஆயுளும், செல்வமும், பகவான் அருளும் கிடைக்கும்.

    ×