search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhubaneswar loses"

    ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய பானி புயல், புவனேஸ்வரில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை வேருடன் சாய்த்துவிட்டது.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் கடந்த 3-ம் தேதி பானி புயல் தாக்கியது. புயலின் வேகம் மற்றும் புயல் கரை கடக்கும் பகுதிகளை முன்கூட்டியே கணித்து வானிலை மையம் எச்சரித்ததால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் புயல் கரை கடந்தபோது, பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 

    ஆனால், அசுர வேகத்தில் வீசிய காற்று கடலோர பகுதிகளை துவம்சம் செய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் புவனேஸ்வரில் மட்டும் பச்சைப் பசேல் என வளர்ந்து, தூய காற்றை வழங்கி வந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்துவிட்டன. நகரில் எங்கு பார்த்தாலும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன. 

    20 வருடங்களுக்கும் மேலாக பராமரித்து வளர்த்த மரங்களுடன் கொண்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு, இப்போது சுக்கு நூறாக நொறுங்கிப்போய் உள்ளது. அந்த இடத்தில் மீண்டும் மரங்களை வளர்த்து, அவற்றின் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கும் பாக்கியத்தை பெறுவதற்கு இன்னும் பல காலம் காத்திருக்க வேண்டும். சாலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. 

    இதுபற்றி வனத்துறை அதிகாரி அசோக் மிஸ்ரா கூறுகையில், “சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மரங்களை எங்கள் குழந்தைகள் போன்று வளர்த்து பராமரித்தோம். புயலால் கிளைகள் முறிந்து சேதமடைந்த மரங்களை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம். 40 பேர் கொண்ட எங்கள் குழுவினர், கடந்த 4 நாட்களில் மட்டும் 800 மரக்கன்றுகள் நட்டுள்ளனர். புயலில் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை இப்போது மதிப்பிட இயலாது. ஒட்டுமொத்த பசுமையும் அழிந்துவிட்டது” என்றார். 
    ×