search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bramorchavam"

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்க உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்க உள்ளது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாக சாலையில் புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் காரியக்கர்மங்கள் நடக்கிறது..

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தனூர் லக்னத்தில் காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி வாகன மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.

    நாளை இரவு சிறிய சேஷ வாகன சேவை, 1-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 2-ந்தேதி காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு ஹனுமந்த வாகன சேவை, 4-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 5-ந்தேதி காலை சர்வ பூபால வாகன சேவை, மாலை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு கருட வாகன சேவை.

    6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 7-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு குதிரை வாகன சேவை, 8-ந்தேதி வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    இத்துடன் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்படுவதற்காக சிவ கொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 5-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா, ஜூன் 12-ந் தேதி காலை தேரோட்டம், 14-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா தலைமையில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளான நேற்று முன்தினம் இரவு உற்சவரான கோவிந்தராஜசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்தநிலையில் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான கோவிந்தராஜசாமி சிறிய சேஷ வாகனத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவரான கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் அம்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஊர்வலத்தின் முன்பாக கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவில் துணை நிர்வாக அதிகாரி வரலட்சுமி, உதவி நிர்வாக அதிகாரி விஜயபாஸ்கரரெட்டி, கோவில் சூப்பிரண்டு ஞானபிரகாஷ், ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை உற்சவர் கோவிந்தராஜசாமி சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    அதன்படி திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியதையொட்டி ஏழுமலையான் கோவிலில் இருந்து 132 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் 17 கிலோ 800 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்கள் கோவிந்தராஜசாமி கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் ஊர்வலமாக கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
    சிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது.
    கடலூர் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் உற்சவர்கள், கொடிமரத்தின் அருகே கொண்டு வரப்பட்டனர்.

    பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மேளதாளத்துடன் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள், கோவில் வளாகத்தை சுற்றிவந்தார். மாலையில் ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர்கள் வீதி உலா நடைபெற இருக்கிறது. வருகிற 17-ந் தேதி நரசிம்மர் ஜெயந்தி மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.
    பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 50-வது ஆண்டு விழா, திருமுறை விழா, அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    விழாவை திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை ஆன்மார்ந்த சிவபூஜை, சொற்பொழிவரங்கம், மாகேஸ்வர பூஜை, திருமுறை பண்ணிசை, அறுபத்துமூவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று காலை அறுபத்து மூவர் திருநீற்றான் மதில் வலம் வந்தனர்.

    பின்னர் திருமுறைகள் பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. மாலையில் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அறுபத்துமூவர் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.

    பிரம்மோற்சவத்தையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் அடுத்த திருவந்தி புரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் பிரம் மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது.

    பிரம்மோற்சவத்தில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவரான தேவநாத சுவாமிக்கும், செங்கமலத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேவநாதசுவாமி தாயாருடன் சிறப்பு அலங் காரத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அலங் கரிக்கப்பட்ட உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி மேளதாளத் துடன் கோவிலில் இருந்து தேருக்கு கொண்டு செல்லப் பட்டது. கோவில் அருகில் அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி எழுந் தருளினர். அங்கு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக் கப்பட்டது.

    பின்னர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்ற பக்தி கோஷமிட்டபடி, வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோடும் வீதியில் அசைந் தாடி வந்த தேரை, ஏராளமான பக்தர்கள் கண்டு, பயபக்தி யுடன் சாமி தரிசனம் செய் தனர். இதற்கான ஏற் பாடுகளை பட்டாச் சாரியார் கள், அறநிலையத்துறை அதி காரிகள், பக்தர்கள் செய் திருந்தனர்.
    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
    திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னரும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி எதிரே பல ஆண்டுகளாக தாமிர தகடுடன் கூடிய கொடிமரம் இருந்தது. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொடிமரத்தில் முலாம் பூசப்பட்ட தங்க தகட்டை பதிக்கும் பணி நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலையில், கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மேற்பார்வையில் நடை பெற்றது.

    26 அடி உயரமுள்ள இந்த கொடிமரத்தில் 140 கிலோ செம்புத்தகடு, 100 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது. கொடிமரத்தின் கிழக்கில் அகிலாண்டேஸ்வரி உருவமும், மேற்கில் விநாயகர், வடக்கில் துர்க்கை, தெற்கில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது.

    கொடிமரத்தின் பிரம்மபாதம் 5 அடியும், விஷ்ணு பாதம் 3 அடியும் அழகிய வேலைப்பாடுகளுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் நடுவே வரகுதானியம் நிரப்பப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இப்படி சிறப்புவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவத்தையொட்டி நித்திய உற்சவர் தேவநாதசுவாமி, பல்லக்கில் எழுந்தருளி புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பிறகு உற்சவ மூர்த்திகள் காலை 5 மணிக்கு கோவில் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தி, பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர். பின்னர் காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சிம்மம், யாளி, சேஷம், யானை போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை உற்சவம் 15-ந்தேதி இரவு நடக்கிறது. பின்னர் 17-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், 18-ந்தேதி காலை பேட்டை உற்சவமும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை தேவநாதசுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று அதிகாலை 4.15 மணி முதல் 5.50 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து தீர்த்தவாரியும், மாலையில் மதுர கவி ஆழ்வார் உற்சவ சாற்றுமுறையும், இரவு பானக பூஜையும் நடக்கிறது. 20-ந்தேதி காலையில் மட்டையடி உற்சவமும், தங்கப்பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 21-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 
    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்்கு கொடியேற்றம் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.



    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் அதிகாலை 3 மணி அளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்து தேர் காலை 8.15 மணிக்கு மேல் உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் காலை 10.10 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

    மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் காலை 10.15 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின்போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி கோஷத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 14-வது ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 14-வது ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருதல் நடைபெற்றது.

    மேலும் கோவில் வளாகத்தில் தினமும் மதியம் திவ்ய பிரபந்த சேவாகாலம் நிகழ்ச்சி நடந்தது. கருடசேவையின்போது சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 10.30 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 31-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந்தேதி நண்பகலில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 21-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    காரைக்கால் நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்காலில் உள்ள பிரசித்திபெற்ற நித்திய கல்யாணப்பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நித்திய கல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கொடிகம்பம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவில் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் தனி அதிகாரி ஆசைதம்பி, முன்னாள் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழா நாட்களில் சந்திரபிரபா, சேஷ, கருட, அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாளின் வீதிஉலா நடக்கிறது.

    விழாவில் வருகிற 15-ந் தேதி திருக்கல்யாணம், 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 19-ந் தேதி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக சென்று திரு-பட்டினத்தில் நடைபெறும் மாசிமகத்தில் கலந்து கொள்கிறார். 21-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
    ×