search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chaat recipe"

    வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. பட்டாணியில் செய்யும் ரகடாவை பட்டீஸ் உடன் சேர்த்து சாப்பிடும்போது இனிப்பும் புளிப்புமாக அருமையாக இருக்கும்.
    பேட்டீஸ்:

    தேவையான பொருட்கள் :

    உருளை கிழங்கு - கால் கிலோ
    பிரட்  - 3 ஸ்லைஸ்
    பூண்டு - சிறிதளவு
    சோள மாவு - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள்  - அரை ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

    பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

    ரகடா :

    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - ஒரு கப்
    வெங்காயம்   - ஒன்று (பெரியது)
    கரம்மசாலா தூள்  - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ்   - தேவையான அளவு
    லெமன் ஜூஸ்  - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு
    சர்க்கரை - அரை ஸ்பூன்
    இஞ்சி  - சிறு துண்டு
    பூண்டு - 4 பல்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.

    அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

    இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.

    பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாவ் பாஜி மும்பையில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இந்த பாவ் பாஜியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    உருளைக்கிழங்கு - 4
    பட்டாணி - 100 கிராம்
    காலிபிளவர் - 100 கிராம்
    கேரட் - 1 சிறியது
    குடைமிளகாய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    பாவ் பாஜி மசாலா - 1 மேஜைக்கரண்டி
    வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு, குடை மிளகாய், கேரட் இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக  வெட்டி வைக்கவும். காலி பிளவரையும் நறுக்கி வைக்கவும்.

    குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், காலிபிளவர், பட்டாணி, சிறிது உப்பு சேர்த்து 3 விசில் வரும் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
     
    விசில் அடங்கியதும் மூடியை திறந்து வெந்த காய்கறிகளை ஒரு மத்து கொண்டு நன்கு மசித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    குடைமிளகாய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காஷ்மீரி மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து  ஒரு நிமிடம் கிளறவும்.

    பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி 100 மில்லி தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.

    மசாலா கெட்டியானதும் வெண்ணெய் சேர்த்து கிளறி பிறகு கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான பாவ் பாஜி மசாலா ரெடி.

    பாவ் பன் செய்முறை

    தேவையான அளவுக்கு பாவ் பன் எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசை கல்லை வைத்து லேசாக சூடானதும் 2 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் கரைந்ததும் பன்னை அதில் சேர்த்து இருபுறமும் லேசாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளவும்.

    சூடு படுத்திய பாவ் பன்னோடு இந்த மசாலாவை சேர்த்து அதன் மேல் சிறிது வெண்ணெய் வைத்து பரிமாறவும்.

    சூப்பரான பாவ் பாஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×