search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal imports scam"

    தமிழக மின்சார வாரியம் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வரப்படுவதில் ரூ.2500 கோடி ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. #CoalImportScam
    சென்னை:

    அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மின்சார வாரியத்தில் நிலக்கரி போக்குவரத்தில் நடந்த ரூ. 2500 கோடி மதிப்பிலான ஊழலை ஆதாரங்களுடன் இன்று வெளிக்கொண்டு வந்துள்ளோம். இதன் மீது விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்பு துறையிடமும் புகார் அளித்துள்ளோம்.

    மகாநதி நிலக்கரி சுரங்கம், ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்கம் போன்ற நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நமது அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக கொண்டு வரப்படுகிறது.

    அதற்கான டெண்டர் கொள்முதல் ஆணை எண். 49 மூலமாக 5 மாதங்களுக்கு சவுத் இந்தியா கார்ப்பரே‌ஷன் லிமிடெட் என்னும் நிறுவனத்திற்கு 2001-ல் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து டெண்டர் விடப்படாமல் தொடர்ந்து இன்று வரை அவர்களுக்கு அந்த கொள்முதல் ஆணை நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது.

    அதில் நிலக்கரி இறக்குமதிக்கான வேலையில் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. நிலக்கரி இறக்குவதற்கு ஒப்பந்ததாரான சவுத் இந்தியா கார்ப்பரே‌ஷன் லிமிடெட் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலி ஆட்களை பயன்படுத்துவதற்காக துறைமுகத்திற்கு அவர்கள் விதிப்படி கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    கொள்முதல் ஆணை 49 படி பணம் கட்டிய ரசீதை மின்சார வாரியத்தில் சமர்ப்பித்து அந்த கட்டணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த வேலை செய்வதற்காக ஒப்பந்ததாரருக்கு அவர்களின் லாபமாக தனியாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.24.05 மின்சார வாரியம் வழங்குகிறது.


    ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரை ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சம் மெட்ரிக் டன் முதல் 35 மெட்ரிக் டன் வரை நிலக்கரி விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலக்கரிக்கு நிலக்கரி இறக்குமதி கூலி மற்றும் அதன் மீதான வரியாக ஒப்பந்ததாரர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டிய பணம் ரூ.239.56 கோடி மட்டுமே.

    ஆனால் ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரே‌ஷன் லிமிடெட் நிலக்கரி இறக்கு மதி கூலியாக ரூ.1267.6 கோடி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டியதாக கூறி நமது மின்சார வாரியத்திடமிருந்து ரூ.1267.6 கோடி பெற்றுள்ளார்.

    கொள்முதல் ஆணை படி துறைமுகத்தில் கட்டிய ரசீதையே வாங்காமல் ஒப்பந்ததாரரும் மின்சார வாரியத்தின் தலைமை அதிகாரிகளும் மோசடி செய்து ரூ.1028 கோடி (ரூ.1267.6 கோடி - ரூ.239.56 கோடி) பணத்தை சுருட்டியுள்ளனர்.

    ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரை மட்டுமே ரூ.1028 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது 2001 முதல் கணக்கு செய்தால், இவ்வாறு செய்த மோசடி குறைந்தபட்சம் ரூ.2500 கோடியை தாண்டும், இந்த ஊழல் 2016-ம் ஆண்டு நடந்த முக்கிய துறைமுக கட்டண தொடர்பான விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கும் மின்சார வாரியத்திற்கும் நடந்த அனல்மின் விகித அளவு குறித்து நடந்த வேறொரு வழக்கில் ஆதாரங்கள் வெளி வந்துள்ளது.

    அந்த வழக்கில் மின்சார வாரியம் நிலக்கரி இறக்குவதற்காக ஒப்பந்ததாரர் மூலமாக துறைமுகத்திற்கு ரூ.1267.6 கோடி கட்டியதாக தெரிவித்தது. விசாகப்பட்டினம் துறைமுகம் நிலக்கரி இறக்கிய முழுக் கூலியையும் ஒப்பந்ததாரர் செலுத்தி விட்டார் என்றும் அது மொத்தமே ரூ.239.56 கோடி தான் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த ஊழல் குறித்து மின்சார வாரியத்தின் தணிக்கை பிரிவும் மத்திய அரசின் தணிக்கை பிரிவும் (சி.ஏ.ஜி.) எழுப்பிய கேள்விகளையும் ஆதாரமாக இணைத்துள்ளோம். இந்த ஊழல் குறித்து மின்சார வாரியத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தும் இன்று வரை அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இன்று வரை அவர்கள் தான் நிலக்கரி இறக்கும் வேலையை செய்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து அந்த பணத்தை மீட்க மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை உடனடியாக விசாரித்து, இதில் பங்குள்ள அனைத்து பொது ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை திரும்ப மீட்டு, அந்த நிறுவனத்தை உடனடியாக டெண்டர் வேலை செய்வதில் இருந்து தடை செய்யவும் கோரி அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியுள்ளோம். இந்த ஊழல் குறித்து மின்சார வாரியமும் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி அனுப்பியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Coal #CoalImportScam
    ×