search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress decided"

    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #MadhyaPradeshelection #Congress

    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது.

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற லட்சியத்துடன் ராகுல் காந்தி தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பிரதமர் பதவியையும் விட்டு கொடுக்க தயார் என்று அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் மெகா கூட்டணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடியான முடிவை எடுத்துள்ளார். வர இருக்கும் சட்ட சபை தேர்தலில் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக களம் இறங்கும் முடிவை எடுத்துள்ளார். சத்தீஷ்கர் மாநில தேர்தலில் அஜீத் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் மாயாவதி இறுதி செய்துள்ளார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அகில இந்திய தலைமை இந்த இரு மாநில தலைமையிடம் இது தொடர்பாக மாயாவதி பற்றி எச்சரித்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி எதுவும் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது. சத்தீஷ்கரில் அஜித் ஜோகி கட்சியுடன் கூட்டணி முடிவை மாயாவதி எடுத்தால் காங்கிரஸ் தலைமை ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளது.

     


    அதே நேரத்தில் சத்தீஷ்கர் மாநிலத்தில் இடது சாரிகள் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.

    இங்கு காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் 0.7 சதவீதமாகும் இதனால் இடது சாரிகள், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ஆர்வத்தில் காங்கிரஸ் உள்ளது. 2013 தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 0.08 சதவீதமும் இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.66 சதவீதமும் தேசியவாத காங்கிரசுக்கு 0.3 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்த இருந்த நிலையில் மாயாவதி இந்த முடிவு எடுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

    சட்டசபை தேர்தலில் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி வைக்காமல் திடீரென முறித்துக் கொண்டதற்கு பல்வேறு நெருக்கடிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    மாயாவதியின் சகோதரர் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதற்கு பயந்து தான் அவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சில காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். #MadhyaPradeshelection #Congress

    ×