search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coracle"

    நாகமரை மற்றும் பண்ணவாடி இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக படகு-பரிசல்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். #Hogenakkal

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாகமரை பரிசல் துறையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், கொளத்தூர் பகுதிகளுக்கு பரிசல் மற்றும் படகில் சென்று வந்தனர். கடந்த ஒரு மாதமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பரிசலில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளதால் மீண்டும் படகு மற்றும் பரிசல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகமரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் உறவினர்கள் பலர் கொளத்தூர் மற்றும் மேட்டூரில் உள்ளனர்.

    மேலும் நாகமரை, ஏரியூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளை படகு மற்றும் பரிசலில் கொண்டு சென்று மேட்டூர், கொளத்தூரில் விற்பனை செய்வார்கள். பரிசலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 10 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தங்களது பொருளாதா நிலை கேள்விக்குறியாகிவிட்டதாக கிராம மக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    கடந்த 22 நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகள் வருமானம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு மாற்றுவழியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு, ஊட்டமலை, கோத்திக்கல் ஆகிய 3 வழிகளில் பரிசல் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோத்திக்கல் என்ற இடத்தில் பரிசல் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பசேகரன் ஆய்வு மேற்கொண்டார். காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவை பொறுத்து மாற்று வழிகளில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டதால் பயணிகள் இன்று ஆனந்தமாக மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து 10ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டது. 

    மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டு இருந்த கயிறு அகற்றப்பட்டு கதவு திறக்கப்பட்டது. பயணிகள் ஆனந்தமாக சென்று மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இன்று 3-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வார்கள்.

    மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படும்.

    அதன்படி கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.


    நீர்வரத்து குறைந்துள்ளதால் 4 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிசல்களை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, கோத்திக்கல் பரிசல் துறை ஆகிய 3 வழிகளில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். பரிசல் பயணத்தின் போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகளை(பாதுகாப்புஉடை) அதிக அளவில் வழங்க வேண்டும் என்றனர். மொத்தம் 420 பரிசல் ஓட்டிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரிசல்கள் காவிரி கரையோரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. 
    ×