search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dam safety bill"

    தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #DamSafetyBill #EdappadiPalaniswami #PMModi
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தொடரில் தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018 நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், தமிழக முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018-ல் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை.



    அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமிழகம் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெறவேண்டும்.

    மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதவால் ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அந்த அணையின் உரிமை பறிபோகும் என தெரிவித்துள்ளார். #DamSafetyBill #EdappadiPalaniswami #PMModi
    மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐக்கிய முற்போக்குக் முன்னணி ஆட்சி நடந்த போது, கேரள மாநில அரசின் சார்பாக மத்தியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ‘அணை பாதுகாப்பு மசோதா’ என்ற பெயரில் மிகத்தந்திரமாக ஒரு மசோதாவைத் தயாரித்தனர். அந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு உள்ளே இருக்கின்ற அணைகளின் மொத்த நிர்வாகக் கட்டுப்பாடும், பராமரிப்பு உள்பட அனைத்து முடிவுகளும், அம்மாநில அரசுகளுக்கே உரிமை ஆக்கப்படும்.

    இதனால், இந்தியாவிலேயே அதிகமாகப் பாதிக்கப்படப்போகும் மாநிலம் தமிழ்நாடுதான்.

    2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகம் பென்னி குயிக் அணையில் 142 அடி முதலில் தேக்கிக் கொள்ளலாம்; பின்னர் 152 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதற்கு எதிராகக் கேரள அரசு செயல்படக் கூடாது என்று கூறினர்.

    ஆனால் கேரள அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி, தங்கள் மாநிலத்திற்கு உள்ளே இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும், மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக் கும் என்றும், அணைகள் குறித்து, மாநில அரசு எடுக்கும் முடிவில் எந்த நீதிமன்றமும் குறுக்கிட முடியாது என்றும் சட்டம் இயற்றியது.

    பின்னாளில் உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்தது.

    இந்தப் பின்னணியில் தான், கேரள அரசுக்குச் சாதகமாகத் திட்டமிட்ட அதிகாரிகள், அணைப் பாதுகாப்பு மசோதா என்ற புதிய மசோதாவைத் தயாரித்தனர். அதன்படி, முல்லைப்பெரியாறு அணை குறித்து முடிவு எடுக்கும் முழு உரிமையும், கேரள அரசுக்கே உரியதாகி விடும் என்பதால், 2012 டிசம்பர் மாதம் 5-ந்தேதி அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கை நான் நேரில் சந்தித்து, ‘உத்தேசித்துள்ள அணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது; சட்டம் ஆக்கக் கூடாது; அரசியல் சட்டத்தின் 262-வது பிரிவின்படி அமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத்தின் குறிக்கோளுக்கு எதிரான நிலைமை விளையும்; தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றேன்.

    கர்நாடகமும் இப்படி ஒரு சட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரைக் கொடுக்காது; ஆகவே, விபரீதமான நிலைமைகள் உருவாகும்; இந்த நிலை எழுந்தால், இந்திய ஒருமைப்பாடு எங்களுக்கு எதற்காக? சோவியத் ஒன்றியம் போல இந்தியா தனித்தனி நாடுகள் ஆகின்ற நிலைமைக்கு வித்திட்டு விடாதீர்கள்’ என்று கூறினேன்.

    அது மட்டும் அல்ல. அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த, மறைந்த ஜெயலலிதா, அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக ஆணித்தரமான வாதங்களை முன் வைத்து, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன்.

    வர இருந்த ஆபத்து நீங்கி விட்டது என்ற நிம்மதியோடு இருக்கும் நிலையில், நம் தமிழ்நாட்டின் தலையில் பாறாங்கல்லைப் போடுவதைப் போல, அணை பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வர நரேந்திர மோடி அரசு முடிவு எடுத்து, கடந்த 13-ம்நாள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் தந்து இருக்கிறது. அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டம் ஆக்கவும் திட்டமிட்டுள்ளது.

    கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைக் கொடுக்காமல் அநீதி விளைவிக்க, அணை பாதுகாப்பு மசோதா வழி வகுத்து விடும்.

    ‘இந்த அணை பாதுகாப்பு மசோதா குறித்த விவரங்கள் எதுவும் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை’ என்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதோடு, ‘மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்த மசோதாவைக் கொண்டு வரக்கூடாது’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.

    எனவே, அணை பாதுகாப்பு மசோதாவின் முழு விவரங்களையும் மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், மூடு மந்திரமாக வைத்துக்கொண்டு, மத்திய அரசு இந்த மசோதாவைச் சட்டம் ஆக்கி, தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு செய்ய முடிவு எடுத்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், நதிநீர் உரிமைப் போராளிகளும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #MDMK #Vaiko
    நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #DamSafefyBill #Cabinet
    புதுடெல்லி:

    நமது நாட்டில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.



    இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.

    இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.

    * அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

    * அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

    * மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    * டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

    * வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.

    * எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.  #DamSafefyBill #Cabinet #Tamilnews 
    ×