search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "different rituals"

    • இறை வழிபாட்டில் நைவேத்தியம் என்பது முக்கிய நிகழ்வாகும்.
    • சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நைவேத்தியம்.

    இறை வழிபாட்டில் நைவேத்தியம் என்பது முக்கிய நிகழ்வாகும். மூலவர் விக்கிரகத்தின் அளவிற்கும், 'பிரகார தெய்வங்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப சாஸ்திரத்தில் ஒரு கணக்கீடே உள்ளது. அந்த கணக்கீட்டின்படி, மூலவர் அகலம், உயத்துக்கு ஏற்ப சரியான அளவு நைவேத்தியம் தயாரித்து இறைவனுக்கு சமர்ப்பித்து வந்தால், அந்த ஆலயம் உயிரோட்டமாக இருக்கும் என்கிறது சாஸ்திரம். இந்த நைவேத்தியம் இறைவனுக்கு படைக்கப்படும்போது, அதில் ஒரு பகுதியானது, அந்த கோவிலை பாதுகாக்கும் பூத கணங்களுக்கும், இறைவனிடம் வேண்டுதலை கொண்டு சேர்க்கும் தேவதைகளுக்கும் உணவாக மாறுகிறது. சில ஆலயங்களில் உள்ள வித்தியாமான நைவேத்தியங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தேங்காய் துருவலும், துலுக்க நாச்சியார் சன்னிதியில் ரொட்டி, வெண்ணெய், கீரையும் நைவேத்தியமாக வைக்கின்றனர்.

    கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணம்மிக்க கஷாயம் நைவேத்தியமாகும்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் 'முனியோ தாயன் பொங்கல்' எனும் அமுது படைக்கப்படுகிறது.

    திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவிலில் ஆத்ம நாதருக்கு, புழுங்கல் அரிசி சோறும், பாகற்காய் கறியுமே நைவேத்தியம்.

     மதுரை கள்ளழகருக்கு, முழு உளுந்தை ஊற வைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

     கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு, சுடச்சுட நெய்யப்பம் செய்து படைத்துக் கொண்டே இருக்கின்றனர். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

    கேரளாவில் உள்ள திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளை சாறு எடுத்து, அதைப் பாலுடன் கலந்து ஈசனுக்கு நைவேத்தியமாக படைக்கின்றனர். பின்னர் அது பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த மூலிகைப் பால் வயிற்றுக் கோளாறை நீக்கும் சக்தி கொண்டது.

    திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன்படியைத் தாண்டி படைக்கப்படும் ஒரே நைவேத்தியம், மண் சட்டியில் வைக்கப்படும் தயிர் சாதம் மட்டுமே.

    சிதம்பரம் நடராஜப்பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

     கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் சுண்டக் காய்ச்சிய பால் பாயசம் நைவேத்தியமாக படைக்கின்றனர்.

     காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு, சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்தியம்.

    ×