search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dissatisfied congress MLAs"

    கர்நாடகவில் பதவி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் போகாமல் இருப்பதற்காக மந்திரி பதவி கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். #Karnataka #CongressMLAs #RahulGandhi
    பெங்களூர்:

    கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்திய காங்கிரசும்- மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன.

    78 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, அதிகாரத்தில் நீடிப்பதற்காக வெறும் 36 எம்.எல்.ஏ.க்களையே வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுத்துள்ளது.

    காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள், புதிய அமைச்சரவையில் 2 துணை முதல்-மந்திரிகள் மற்றும் முக்கிய இலாகாக்களை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரம் காட்டினார்கள். ஆனால் காங்கிரசுக்கு ஒரே ஒரு துணை முதல்-மந்திரி பதவியை மட்டும் விட்டுக் கொடுத்த குமாரசாமி, முக்கிய இலாகாக்களை கொடுக்க மறுத்துவிட்டார்.


    இதனால் கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் கடைசியில் ராகுல் உத்தரவை ஏற்று அமைதியானார்கள்.

    இதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதில் பதவி கிடைக்காததால் முன்னாள் அமைச்சர்கள் எம்.பி. பாட்டீல், சதீஷ் ஆகிய இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து ராகுல்காந்தி அவர்களை டெல்லிக்கு வரவழைத்து சமரச பேச்சு நடத்தினார். உரிய நேரத்தில் உரிய பதவி தரப்படும் என்று அனுப்பி வைத்தார். என்றாலும் காங்கிரசில் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அதிருப்தியிலேயே உள்ளனர்.

    கர்நாடகா காங்கிரசில் நிலவும் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்ற கர்நாடகா பா.ஜ.க. முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சர் பதவி தரத் தயார் என்று காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை காட்டப்பட்டுள்ளது.

    இதனால் கர்நாடகா காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.


    தற்போதைய நிலை நீடிக்கும் பட்சத்தில் நிலைமை கை மீறி போய்விடும் என்று ராகுலிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் அறிவுறுத்தியுள்ளனர். இன்னும் சில மாதங்கள் தாமதித்தால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவி விட கூடும் என்றும் உறுதியாக தெரிய வந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கொடுத்து தக்க வைத்துக்கொள்ள ராகுல் முடிவு செய்துள்ளார். கர்நாடகா அமைச்சரவையில் மேலும் 6 பேரை அமைச்சர்களாக்க முடியும்.

    எனவே அந்த 6 இடங்களிலும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மந்திரிகளாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பாட்டீல், சதிஷ் உள்பட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை சிக்கலின்றி கொண்டு செல்வதற்காக ஒருங்கிணைப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான இந்த குழுவில் இரு கட்சி தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

    வருகிற வியாழக்கிழமை இந்த ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை வரையறுக்க ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட சில முக்கிய கொள்கை முடிவுகளை அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. #Karnataka #CongressMLAs #RahulGandhi
    ×