search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekadasi Fasting Benefits"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
    • சைத்ர மாத சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி.

    பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். இந்த உடல் யந்திரத்தை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்னும் 10 இந்திரியங்கள் இயக்குகின்றன. உடல் இயக்கமான கை, கால், உள்ளுறுப்புகள் போன்றவை கர்மேந்திரியங்கள்.

    ஒரு பொருளின் தன்மையை நமக்கு விளக்கும் கண், காது, மூக்கு போன்றவை ஞானேந்திரியங்கள். இவற்றோடு மனம் என்னும் கண்ணுக்குத் தெரியாத இந்திரியம் நம்மை வழிநடத்துகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல 11 என்கிற எண்ணிக்கை அடிப்படையில் அமையும் இந்த திதி ஓய்வுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி என்று பொருள்.

    ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர். பெயர் மட்டுமல்ல ஒவ்வோர் ஏகாதசியும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை. ஏகாதசி புராணம் என்னும் நூல் ஒவ்வோர் ஏகாதசியின் சிறப்பையும் பட்டியலிடுகிறது. அவ்வாறு சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.

    இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.

    முன்னொருகாலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை பரம உத்தமமான மன்னன் புண்டரீகன் ஆண்டுவந்தான். அவன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருப்பார்கள். அவன் அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான்.

    லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். தங்களின் சாபம் எப்போது நீங்கும் என்று தவித்திருந்தவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட லலித், லலிதா ஆகிய இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப் பின்பற்றினர்.

    அந்த நாளில் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்

    காமதா ஏகாதசி சிறப்புகள்

    1. ஏழு ஜன்மப் பாவம் தீரும்

    2. ஆன்மா சுத்தமாகும்

    3. சாபங்கள் தீரும்

    4. மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை

    5. எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்

    6. தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்.

    7. தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்.

    ×