search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "espionage groups"

    • ஆயுதக் கடத்தலின் பின்னணியில் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.
    • கைது செய்யப்பட்டுள்ள ஆதிமூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர் பெற வைப்பதற்கு மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தலை தூக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் உள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக உள்ள விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களையும், சிதறி ஓடி தலைமறைவாக உள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்களையும் மத்திய உளவு பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த கண்காணிப்பு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடல் பகுதியில் மர்ம படகு ஒன்றை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களும், ஆயுதங்களும் கடத்தப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. 300 கிலோ ஹெராயின், 9 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் ஆகியவை படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தோட்டாக்கள் 9 எம்.எம். ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக் கூடியவை என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கடத்திச் செல்லப்பட்டது விசாரணையில் அம்பலமானது. அந்த அமைப்பை மீண்டும் பலப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் ஈரான் வழியாக கேரளாவுக்கு கடத்திவரப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. கேரளா வழியாக இலங் கைக்கு இந்த ஆயுதங்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தான் அவை பிடிபட்டன. இந்த ஆயுதக் கடத்தலின் பின்னணியில் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான குணசேகரன், புஷ்ப ராஜா, முகமது அஸ்மின் ஆகிய 3 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்ததால் வழக்கு விசாரணை என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதக் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். இதில் சற்குணம் என்கிற சபேசன் சிக்கினார்.

    அவர் திருச்சி முகாமில் பிடிபட்டவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வளசரவாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த சபேசன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்தியதாக சேலையூரில் வசித்து வந்த ஆதிலிங்கம் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து ஆயுத கடத்தல் வழக்கில் சிக்கியவர்களின் கூட்டாளி ஆவார்.

    ஆயுதக் கடத்தலுக்கு இவர் மூளையாக செயல்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு பாதுகாவலராக ஆதி லிங்கம் செயல்பட்டு வந்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் ஆதிலிங்கம் இவ்வாறு செயல்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. வெளி நாடுகளை சேர்ந்த பலர் போலி ஆவணங்களை தயாரித்து தங்களை இந்தியர்கள் போல காட்டிக் கொண்டு வலம் வந்திருப்பதும் தெரிய வந்தது.

    பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் இந்தியா வழியாக இலங் கைக்கு ஆயுதக் கடத்த லில் ஈடுபடுவதற்கும் ஆதிலிங்கம பல்வேறு உதவிகளை செய்திருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதற்கிடையே ஆயுதக் கடத்தலில் தொடர்புடைய உலன் என்பவர் ஏமனுக்கு தப்பிச் சென்றிருப்பதும், அந்நாட்டு அதிகாரிகள் அவரை கைது செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    விடுதலைப் புலிகளுக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள ஆதிமூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர் பெற வைப்பதற்கு மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உளவு பிரிவு மற்றும் மாநில உளவு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிர கண்காணிப்பிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×