search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake insurance certificate"

    மோட்டார் வாகன விபத்து வழக்கில் போலி காப்பீட்டு சான்றிதழ் மூலம் இழப்பீடு பெற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவிய அரசன். இவர், கடந்த 2009-ம் ஆண்டு பள்ளிக் கூடத்துக்கு சைக்கிளில் சென்றார்.

    அப்போது நீலமேகம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து, காவிய அரசனின் சைக்கிள் மீது மோதினார். இதில், படுகாயமடைந்த காவிய அரசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    அதிகவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நீலமேகத்திடம் இருந்தும், அந்த மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்ட எச்.டி.எப்.சி. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு காவிய அரசன், தன் தந்தை மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த அரூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்ய வில்லை. இதை விசாரணையின்போது எங்கள் அதிகாரி கூறியும், தீர்ப்பாயம் அதை கண்டு கொள்ளாமல், இழப்பீடு வழங்க எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளின் இன்சூரன்ஸ் சான்றிதழ் என்று போலியான ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரூர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டு சான்றிதழும், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதை இரண்டையும் ஆய்வு செய்த நீதிபதி, அரூர் தீர்ப்பாயத்தில் போலி சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

    பின்னர் நீதிபதி முரளி தரன் பிறப்பித்த உத்தரவில், ‘போலி காப்பீட்டு சான்றிதழ் குறித்து தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்யவேண்டும். பின்னர், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், அதன் காப்பீட்டு சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து புலன் விசாரணை செய்து, வருகிற செப்டம்பர் 25-ந் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    ×