search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Field analysis"

    புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு நடத்தினார். இதில் முதல் கட்டமாக புதுவை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். #DMK #MKStalin
    புதுச்சேரி:

    தமிழகத்தில் உள்ள 65 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கடந்த சில நாட்களாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார்.

    தமிழக தி.மு.க. அணி நிர்வாகிகளுடன், சென்னை அறிவாலயத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். இதனை தொடர்ந்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கள ஆய்வு செய்தார்.

    புதுவை ஆனந்தா இன் ஓட்டலில் முதல் தளத்தில் கள ஆய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுவை மாநிலத்தில் வடக்கு, தெற்கு மற்றும் காரைக்காலில் தி.மு.க. உள்ளது.

    இதில் முதல் கட்டமாக புதுவை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தினார். வடக்கு மாநில நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் என தனித்தனி அறையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

    அவர்களின் அறைக்கே சென்று மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார். காலை 8.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை வடக்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளிடம் கள ஆய்வு செய்தார்.


    பின்னர் 10.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை தெற்கு மாநில தி.மு.க. நிர்வாகிகளுடனும் கள ஆய்வு நடந்துகிறார். ஆய்வின் போது அந்தந்த பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    மதியம் 12 மணிக்கு மேல் புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகளுடன் அமர்ந்து மு.க.ஸ்டாலின் உணவு அருந்துகிறார். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை காரைக்கால் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடக்கிறது.

    மாலையில் கள ஆய்வினை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் கடலூர் வழியாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார்.

    முன்னதாக நேற்று இரவு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக புதுவை வந்தார். அவருக்கு புதுவை மாநில எல்லையான கோரிமேட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார் மற்றும் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு புதுவை அக்கார்டு ஓட்டலில் மு.க. ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்தார். #DMK #MKStalin
    ×